
மகாராஷ்டிராவில் திருடன் ஒருவர், தான் திருடியது பிரபல மராத்தி கவிஞரின் வீட்டில் என்பதை அறிந்தவுடன் திருடிய பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டம் நெரல் என்ற இடத்தில் புகழ்பெற்ற மராத்தி கவிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் நாராயண் சர்வே-யின் வீடு உள்ளது. மும்பையில் பிறந்த இவர் தனது 84-வது வயதில் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார். இவரது கவிதைகள் நகர்ப்புற தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை விரிவாக சித்தரிப்பவை ஆகும்.
நாராயண் சர்வேயின் வீட்டில் தற்போது அவரது மகள் சுஜாதாவும் மருமகன் கணேஷ் கரேவும் வசிக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் மகனுடன் இருப்பதற்காக விரார் சென்றனர். இதனால் அவர்களின் வீடு 10 நாட்களாக பூட்டிக் கிடந்தது
நாராயண் சர்வேஇந்த நிலையில் அந்த வீட்டுக்குள் புகுந்த திருடன் ஒருவர் எல்இடி டிவி உள்ளிட்ட சில பொருட்களை திருடிச் சென்றுள்ளார். மறுநாள் மேலும் சில பொருட்களை எடுக்க அவர் திரும்பி வந்தபோது, ஒரு அறையில் சர்வேயின் புகைப்படம் மற்றும் நினைவுப் பொருட்களை அவர் கவனித்துள்ளார்.
இதனால் மனம் வருந்திய திருடன் தான் எடுத்துச் சென்ற பொருட்களை எல்லாம் மீண்டும் கொண்டு வந்து வைத்துள்ளார். மேலும் இவ்வளவு பெரிய இலக்கியவாதியின் வீட்டில் திருடியதற்காக உரிமையாளரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஒரு குறிப்பை அவர் சுவரில் ஒட்டிச் சென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சுஜாதாவும் அவரது கணவரும் வீடு திரும்பியபோது, சுவரில் இருந்த குறிப்பை கண்டு நெரல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். டி.வி. மற்றும் பிறபொருட்களில் இருந்த கைரேகையை போலீஸார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments: