News Just In

6/01/2024 06:56:00 PM

பொது வேட்பாளருக்கான தெரிவு கிழக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்!: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்





 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கான தெரிவு கிழக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கட்சிகள், குடிமக்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து கூட்டாக தீர்மானமொன்றை மேற்கொள்ளும் பட்சத்தில், தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கான உடன்பாட்டை மாணவர் சமூகமாக வெளிப்படுத்துவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தலைப் புறக்கணிப்பதாலோ தமிழ் பொது வேட்பாளரொருவரை நிறுத்துவதாலோ சிங்கள பேரினவாதத்தின் முகவர்கள் வென்றுவிடக்கூடும் என்ற கேள்வி அனைவரிடமும் எழும் நிலையில், எமது தேவை என்னவென்பதிலேயே அக்கறை கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளர் என்ற எண்ணக்கரு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நடைமுறையில் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில், கிழக்கிலிருந்து வேட்பாளர் தெரிவு இடம்பெற வேண்டும் எனவும் குறித்த வேட்பாளர் பெண் ஒருவராக இருத்தல் உத்தமம் எனவும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: