News Just In

12/16/2023 03:07:00 PM

மட்டக்களப்பு சிறையில் கைதியை தாக்கிக் கொன்ற சக கைதிகள் ; இருவருக்கு விளக்கமறியல்




மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகளால் ஆண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இனங்காணப்பட்ட இரண்டு கைதிகளை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் கடந்த வியாழக்கிழமை (14) உத்தரவிட்டார்.

கைதியின் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் விசாரணை மூலம் இனங்காணப்பட்ட இந்த இரு கைதிகளுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த இரு கைதிகளும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவர் கசிப்பு தொடர்பான வழக்கொன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிமன்றம் பிறப்பித்த பிடிவிறாந்தில், கடந்த நவம்பர் 22ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸார் அவரை கைது செய்தனர்.

கைதானவரை மறுநாள் நவம்பர் 23ஆம் திகதி களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அவரை பிணையில் எடுப்பதற்கு எவரும் இருக்கவில்லை. இதனால் அவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

அந்த சிறைச்சாலைக்குள் அவரை சக கைதிகள் தாக்கியுள்ளனர். அதனையடுத்து, தாக்கப்பட்டு படுகாயமடைந்த கைதி நவம்பர் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட நீதவான் பீற்றர் போல் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
அதன் பின்னர், பிரேத பரிசோதனையின்போது கைதி மொட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து, கைதியின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது உயரிழந்தவருடன் 9 கைதிகள் சிறைக்கூட அறை ஒன்றில் இருந்து வந்துள்ளதாகவும், குறித்த நபர் தொடர்ச்சியாக கசிப்பு தேவை என சத்தமிட்டு வந்துள்ளதாகவும், இதனால் சக கைதிகளுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவரை சக கைதிகளான வாழைச்சேனையை சேர்ந்த இருவர் தாக்கியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த தாக்குதல் தொடர்பில் கைதான இரு கைதிகளும் போதைப்பொருள் சார்ந்த குற்றத்தினால் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.அதனையடுத்து, கைதியின் மரணம் குறித்த வழக்கிலும் சிக்கி, தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: