News Just In

11/22/2023 02:43:00 PM

சனத் நிஷாந்தவின் நாடாளுமன்ற சேவை இடைநிறுத்தம்!




இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் நாடாளுமன்ற சேவை காலம் இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்றைய(22) சபை அமர்வுகளின் போது இதனை அறிவித்தார்.

மேலும், நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(21) சனத் நிஷாந்த ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டமையை கண்டிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 146இன் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அது இன்று (22) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருக்கும் போது சனத் நிஷாந்த உள்ளிட்ட ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கடும் கூச்சலிட்டு குழப்பம் விளைவித்திருந்தனர்.

அத்துடன், சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் அவர் அருகில் வந்த சனத் நிஷாந்த, அவர் கையில் இருந்த கோப்புக்களைப் பறித்துச் சென்றார்.

அதேசமயம், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த இடத்தில் ஒன்று திரண்டதுடன் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதன்போது, பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்கள் உள்ளிட்டோரே காரணம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வெளியிட, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

No comments: