News Just In

11/15/2023 04:03:00 PM

இலங்கையில் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்ல தடையில்லை!

சட்ட மாஅதிபர் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினர் உத்தரவாதம்! குரல்கள் இயக்கத்தின் முயற்சியால் உரிமை பெற்றுக் கொடுக்கப்பட்டது



இலங்கையில் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்ல தடையில்லை என, சட்ட மாஅதிபர் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினர் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா விவகாரத்தில் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த எழுத்தாணை உத்தரவு கோரும் (Writ) வழக்கு அண்மையில் (07) முடிவிற்கு வந்தது.

தனது கலாசார ஆடையோடு பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என, ஆசிரியை பஹ்மிதா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் Writ வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதேநேரம் தனது அரச கடமையைப் பொறுப்பேற்கச் சென்ற வேளை அதனைத் தடுத்தமைக்கு எதிராக சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக குற்றவியல் வழக்கொன்றை திருகோணமலை நீதவான் நீதிமன்றிலும் தாக்கல் செய்திருந்தார்.

பாடசாலை அதிபர் சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து வரத் தடையில்லை என்ற உத்தரவாதத்தைத் தந்ததைத் தொடர்ந்து அதிபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமரச அடிப்படையில் முடிவிற்கு வந்ததிருந்தது.

எனினும் நீதவான் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் அப்பாடசாலையினை மாத்திரமே கட்டுப்படுத்தும்.

அந்த வகையில் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளான கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், சண்முகா அதிபர், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், அரசைப் பிரதி நிதித்துவப்படுத்திய சட்ட மாஅதிபர் திணைக்களம் ஆகியன பாடசாலைகளில் ஹபாயா அணிந்து செல்வதில் எந்தத் தடையும் இல்லை எனும் உத்தரவாத்தினை எழுத்து மூலம் வழங்கியதை அடுத்து இவ்வழக்கு முடிவிற்கு வந்தது.

இந்த முடிவின் மூலம் இலங்கையில் இருக்கும் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்வதற்கு தடையில்லை என்பது குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொறேயா, குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி றாஸி முஹம்மத் மற்றும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் ஆகியோர் இன்று ஆஜராகி இருந்தனர்.

குரல்கள் இயக்கம் (Voices Movement) பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு சார்பாக ஆரம்பம் முதல் போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: