News Just In

11/16/2023 08:15:00 PM

அபாயகரமான கட்டிடங்களைக் கொண்ட 74 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: சுசில் பிரேமஜயந்த!



கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மற்றும் தங்காலை பாலிக்கா வித்தியாலயம் உட்பட 74 பாடசாலைகள் அபாயகரமான கட்டிடங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.

அபாயகரமான கட்டிடங்களில் இருந்து சிறுவர்களை வெளியேற்றுமாறு குறித்த பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டிடங்கள் புனரமைக்கப்படும் வரை சிறுவர்களை தங்க வைப்பதற்கான மாற்று பொறிமுறையொன்று நடைமுறையில் உள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு, தேர்ஸ்டன் கல்லூரியில் நான்கு மாடிக் கட்டிடம் அபாயகரமான நிலையில் உள்ளதால் அதில் இருந்த 24 வகுப்பறைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், கட்டிடம் நிர்மாணிக்கப்படும் வரை இந்த வகுப்பறைகளில் உள்ள மாணவர்கள் பாடசாலை மைதானத்தைச் சுற்றியுள்ள தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தங்காலை பாலிக்கா வித்தியாலயத்தில் இருந்த கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டு இராணுவத்தின் ஆதரவுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2019, 20, 21 மற்றும் 22 ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலைகளில் அபாயகரமான கட்டிடங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வெல்லம்பிட்டிய, வேரகொட வித்தியாலயத்தில் 6 வயதுடைய பாடசாலை மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments: