News Just In

6/15/2023 01:07:00 PM

மிகக்குறைந்த விலைகளில் இலங்கையில் வாகனங்கள்..! இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு !




டொலர் வெளிபாய்ச்சப்படாமலேயே ஜப்பானில் இருந்து வாகனங்களை இறக்குதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஜனாதிபதி ஜப்பான் சென்றிருந்த போது, எமது வாகன இறக்குமதியாளர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

இதன்போது தற்போதைய சூழ்நிலையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாது என்றும், நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆனால் நாங்கள் இந்த துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டவர்கள். டொலர் வெளிபாய்ச்சப்படாமலேயே ஜப்பானில் இருந்து வாகனங்களை இறக்குதி செய்ய முடியும்.

ஜப்பானில் இருந்து வாகனங்களை 70 சதவீத விலைக்கழிவுடன் இறக்குமதி செய்ய முடியும்.

உதாரணமாக இலங்கையில் தற்போதுள்ள 2017 ஆண்டுக்குரிய விட்ஸ் ரக கார்களை ஜப்பானில் இருந்து 10 - 12 இலட்சம் ரூபாவுக்கு இலங்கைக்கு கொண்டுவர முடியும்.

இதனால் மிகக்குறைந்த விலைகளில் வாகனங்களை இலங்கையில் விற்பனை செய்ய முடியும். எனவே அரசாங்கம் எங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.




இதேவேளை பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் பல காரணிகளை கருத்தில் கொண்டு இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சுமார் 4,000 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், 3,000 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
சுங்க அதிகாரிகளின் கோரிக்கை

இதேவேளை வாகன இறக்குமதி தொடர்பில் சுங்க அதிகாரிகளும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோரிக்கையொன்றை விடுத்திருந்தனர்.

இதன்போது கடந்த மூன்று வருட காலமாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சுங்க வருமானம் குறைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன் வாகன இறக்குமதி உட்பட பல வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் இருக்கும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது. வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளினால் சுங்கத்திற்கு 20 வீத வருமானம் கிடைக்கும்.

எனினும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது. 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அதிகூடிய வரி வருமானம் 2018ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளது. அதன் வரித்தொகை 923 பில்லியன் ரூபா.

இதன்படி 194 பில்லியன் ரூபா வருமானம் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த மூன்று வருட காலமாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சுங்க வருமானம் குறைந்துள்ளது.

இம்மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் 150 பில்லியன் ரூபா வரியாக வசூலிக்க முடியும் என சுட்டிக்காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: