News Just In

2/08/2023 12:26:00 PM

பசுமைப் பொருளாதாரத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பான்கீமூன் ஆதரவு அமைச்சர் நஸீர் அஹமட்



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து, பசுமைப் பொருளாதாரத்தை ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக ஐ,நாவின் முன்னாள் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளதாக, சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள ஐ,நா முன்னாள் செயலாளர் நாயகமும், உலக பசுமைப் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் தலைவருமான பான் கீமூனுடன் விஷேட சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுபற்றி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, காடுகளைப் பாதுகாப்பதில் ஏனைய கைத்தொழில் நாடுகளைவிடவும் இலங்கை முன்னணியில் உள்ளது. நாட்டில்,32 வீதமான பசுமைக் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியுடன் உள்ளார். உயிர்ப் பல்வகையைப் பாதுகாக்கும் பிரதான திட்டங்களில் காடுகளைப் பாதுகாப்பது பிரதான பங்கு வகிக்கிறது.இது மட்டுமன்றி, காலநிலையைப் பாதுகாப்பதில் காடுகளின் பங்களிப்புக்கள் இன்றியமையாததாகி விட்டன. இத்தகைய பெறுமதிமிக்க காடுகள் கைத்தொழில் புரட்சிகளால் அழிக்கப்படுகின்றன.

இதைப்பாதுகாப்பது அவசியம். இதற்கான ஏற்பாடுகளில் சுற்றாடல் அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.காடுகளைப் பாதுகாக்கும் செயற்றிட்டங்களை வடிவமைத்து ஒப்படைத்தால், அதற்கான நிதியுதவிகளை,உலக பசுமைப் பொருளாதார வளர்ச்சி நிறுவனம் வழங்கும் என்றும் எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.




No comments: