கல்வி அபிவிருத்திச் சங்கத்தால் HECS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை (2022) வழிகாட்டல் வகுப்பில் கலந்து வெட்டு புள்ளிக்குமேல் பெற்ற 24 மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு இன்று (25.02.2023) கல்வி அபிவிருத்திச் சங்க சிவநேசராசா மண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி அபிவிருத்திச் சங்க தலைவர் நா. ஜோதிராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி. திருமதி. சிவானந்தன் பாத்லெட் மைதிலி (உதவி பணிப்பாளர், போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு) அவர்களும் கெளரவ அதிதியாக வைத்திய கலாநிதி. திருமதி. சசிகுமாரன் பிரமிளா (போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு) அவர்களுடன் சிறப்பு அதிதிகளாக J. பிரதீபராஜ் (தலைவர், கல்லடி வேலூர் ஸ்ரீ காளியம்மன் ஆலயம்), குணசீலன் (தலைவர், கல்லடி உப்போடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய பரிபாலன சபை) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கல்வி அபிவிருத்திச் சங்கத்தால் 1992 இல் ஆரம்பிக்கப்பட்ட O/L மாணவர்களுக்கான இலவச வகுப்பின் முதல் தொகுதி மாணவி வைத்திய கலாநிதி. திருமதி. சிவானந்தன் பாத்லெட் மைதிலி என்பதும் 1993 இல் ஆரம்பிக்கப்பட்ட தரம் 05 வகுப்பின் முதல் தொகுதி மாணவி வைத்திய கலாநிதி. திருமதி. சசிகுமாரன் பிரமிளா என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 24 மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டதுடன் பிரதம அதிதி மற்றும் கெளரவ அதிதிகள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
"பெற்றோர்கள் யாவரும் பிள்ளைகளின் வளர்ச்சியிலும் நடத்தையிலும் கவனமெடுக்க வேண்டும். பெற்றோர்கள் தமது வேலைப்பளு நிமிர்த்தம் பிள்ளைகளுக்கு போன் வழங்குவதை நிறுத்த வேண்டும். 5 நிமிடம் 10 நிமிடம் என பல மணித்தியாலங்கள் போனுக்கு பிள்ளைகள் பழக்கப்படுவதால் அவர்களின் எதிர்காலம் பாழடிக்கப்படும். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் சேர்ந்து உணவருந்துவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் தமது பிரச்சனைகளை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ளத்தக்க தாய் தந்தையராக பெற்றோர் இருக்க வேண்டும்" என பிரதம அதிதியாக கலந்துகொண்ட வைத்திய கலாநிதி. திருமதி. சிவானந்தன் பாத்லெட் மைதிலி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.
No comments: