பாறூக் ஷிஹான், நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா மையவாடி கடலரிப்புக்குள்ளாகி பாவிக்க முடியாத நிலைக்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. உடனடியாக மாற்று இடத்தில் புதிய ஜனாஸா மையவாடியை அமைக்கவேண்டிய தேவை உள்ளதால் உடனடியாக புதிய காணியொன்றை இதற்காக பெறவேண்டியுள்ளது. இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுத்து புதிய காணியொன்றை வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், காணியமைச்சர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை அரசாங்க அதிபர், காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு மாளிகைக்காடு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா கோரிக்கை முன்வைத்துள்ளது.
மேற்படி அரச முக்கியஸ்தர்களுக்கு முன்வைத்துள்ள கோரிக்கையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராம மக்களின் ஜனாஸா மையவாடி கடலரிப்பில் முழுமையாக சேதமாகியுள்ளதுடன், ஜனாஸாக்கள் கடலில் அள்ளுண்ட போன வரலாறுகளும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் பராமரிப்பில் உள்ள அந்நூர் ஜனாஸா அடக்கஸ்தலம் மோசமான கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன. மாளிகைக்காடு, மக்கள் முழுமையாகவும் சாய்ந்தமருது மக்கள் சில பகுதியினருமடங்கலாக 10,000 மக்கள் அளவில் பாவிக்கும் இந்த மையவாடியை தொடர்ந்தும் பாவிக்க முடியாத நிலை உள்ளதையும் இங்கு தெளிவாக விளக்கியுள்ளனர்.
இது தொடர்பில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளர் யூ.எல். நூருல் ஹுதா கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சுமார் 90 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் சில மாதங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் கடலில் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. எந்த ஒரு தற்காலிக நடவடிக்கையும் இந்த சிக்கலை தீர்க்காது. எனவே, காரைதீவு பிரதேச செயலகம் அல்லது சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் பொருத்தமான அரச காணியை ஒதுக்கி இடர் முகாமைத்துவ நிலையம், அம்பாறை அரசாங்க அதிபர், காரைதீவு பிரதேச செயலாளர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மற்றும் காரைதீவு பிரதேச சபை என்பன ஒன்றிணைந்து உடனடி தீர்வொன்றை வழங்க வேண்டி கோரிக்கை முன்வைத்துள்ளோம். இது தொடர்பில் அரச உயர்மட்டங்களுக்கும் தெளிவான விளக்கத்துடன் கூடிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் ஜனாஸா நல்லடக்கம் செய்ய இடமில்லாமல் மக்கள் திண்டாடும் நிலை உருவாகும். அண்மையில் உள்ள மையவாடிகளும் அடர்த்தியால் ஒத்துழைக்க முடியாத நிலை உருவாக்கலாம். இது தொடர்பில் அவசர நடவடிக்கை தேவை. அமைச்சர்கள்,அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் குறித்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க கூடியவர்கள் என எதிர்பார்ப்பவர்களிடம் தொடர்ந்தும் நாங்கள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம்- என்றார்.
No comments: