News Just In

11/20/2022 05:31:00 PM

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹசன் அலி "தமிழன்" க்கு வழங்கிய சமகால முஸ்லிம் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான விசேட செவ்விஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மிக நீண்டகாலம் செயலாளர் நாயகமாக பதவி வகித்து இப்போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமாக பதவி வகித்து வரும் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹசன் அலி "தமிழன்" க்கு வழங்கிய சமகால முஸ்லிம் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான விசேட செவ்வி
நேர்கண்டவர் :
நூருல் ஹுதா உமர்

Q : முஸ்லிம் தலைவர்களினால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கரையோர மாவட்ட கோரிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

கரையோர மாவட்ட கோரிக்கையை தலைவர் அஸ்ரப் முதன்மைப்படுத்தி வைத்திருந்தார். தலைவரின் மரணத்தின் பின்னர் வந்த தலைவர்கள் அந்த கோரிக்கையை பற்றி எங்காவது பேசினார்களா? அல்லது வலியுறுத்தினார்களா? என்றால் இல்லை. அது ஏட்டு சுரைக்காய் அது சாதித்தியமாகாது என்று மக்களை மறக்கடித்ததை தவிர அவர்கள் வேறு எதுவும் செய்யவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் சம்மாந்துறையில் நடந்த கூட்டமொன்றில் இது விடயமாக நான் பேசிவிட்டு அமர்ந்தவுடன் என்னை தொடர்ந்து பேசிய கட்சி பிரமுகர் ஒருவர் இது ஏட்டுச்சுரைக்காய் பயன்படுத்த முடியாது என்றார். இப்படித்தான் இருக்கிறது இவர்களின் கரையோர மாவட்ட கோரிக்கையின் நிலைமை. இப்போது அந்த விடயம் மேலெழ ஆரம்பித்துள்ளது. காரணம் என்னவெனில் தமிழ் மக்கள் முன்வைத்திருக்கும் "மீளப்பெற முடியாத சமஸ்டியுடன் வடகிழக்கு இணைப்பு" எனும் கோரிக்கையாகும். இவ்வாறான காய் நகர்த்தல்களின் போது முஸ்லிங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை தலைவர் அஸ்ரப் அப்போதே கூறி வைத்து விட்டார். இப்போதாவது கரையோர மாவட்டத்தை முஸ்லிம் தலைவர்கள் கோருவார்களா? இல்லையா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். என்னை மு.காவிலிருந்து ஓரங்கட்ட காரணம் இந்த கரையோர மாவட்ட தேவையை அதிகமாக பேசியதே எனலாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒப்பந்தங்களில் இந்த கோரிக்கையை முன்மொழிந்து வந்தேன். தலைவர் அஸ்ரபும் நாட்டின் தலைவர்களுடன் இதுவிடயமாக ஒப்பந்தங்கள் செய்தார். இது தொடர்பில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மலையக தலைவர் தொண்டமானுடனும் ஒப்பந்தங்கள் செய்தார்.

எல்லா சிங்கள தலைவர்களினது மனதிலும் அஸ்ரப் இந்த கரையோர மாவட்ட எண்ணத்தை விதைத்தார். தமிழ் தலைவர்களும் எத்தனையோ இதுதொடர்பிலான ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளனர். இப்படியான முக்கியமான விடயத்தை இவர்கள் முழுமையாக மறந்துவிட்டார்கள். தலைவர் அஸ்ரப் காலமானது முதல் மூன்று காங்கிரஸிகளினது தலைவர்களும் எந்த அரசாங்கம் வந்தாலும் அரசின் பக்கம் இவர்கள் இருந்து கொண்டே தான் இருந்தார்கள். முஸ்லிங்களுக்கு அநியாயம் நடக்கிறது என்று கூறும் இவர்கள் அநியாயம் நடக்கும் போது அரசுக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள். இந்த அநியாயங்கள் நடக்க காரணம் இவர்கள் தான். இவர்களினால் முஸ்லிம் சமூகம் அடைந்த நன்மை என்ன

Q : "மீளப்பெற முடியாத சமஸ்டி உடைய இணைந்த வடகிழக்கு" பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

நாட்டில் உள்ள சகல இனங்களும் தேசிய இனங்களாக நாட்டின் யாப்பு ஏற்றுக்கொண்டு உரிமைகள் வழங்கப்பட வேண்டும். நாட்டை பிரிக்க எண்ணவில்லை. இப்போது எமது நாட்டில் எல்லாமே இனவாதமாக மாறியுள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது. அதனால் தான் கொள்கை மாற்றம் கேட்கிறோம். அதன் பின்னர் நாடு சுமூகமானால் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி கொள்கையை மாற்றிக்கொள்வது பற்றி சிந்திக்கலாம். இப்போது இவர்கள் கூறும் கொள்கை மாற்றத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தான் தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து அவர்களின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கிறார்கள். "மீளப்பெற முடியாத சமஸ்டி உடைய இணைந்த வடகிழக்கு" எனும் தமிழ் மக்களின் வாதம் எவ்வளவு கடுமையானது. இந்த வடக்கு கிழக்கில் தான் நாம் செறிவாக இருக்கிறோம். எங்களின் தலைமைகள் அது பற்றி இன்னும் மூச்சுக்கூட விடவில்லை. தலைவர் அஸ்ரப் இந்த விடயத்தில் தெளிவாக இருந்தார். அதனால் தான் இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற தென்கிழக்கு அலகை கோரினார். இதில் தமிழர்களோ அல்லது சிங்களவர்களோ பாதிக்க போவதில்லை.

இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் எங்களின் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு .கிட்டும். இப்போது இருக்கும் தலைவர்கள் கரையோர மாவட்டம், முஸ்லிம் உரிமைகள், தனியலகு என்றெல்லாம் பேச முன்வர மாட்டார்கள். கண்டியை சேர்ந்த தலைவருக்கு சிங்கள வாக்குகளே வெற்றியை தீர்மானிப்பது அதனால் வாய்திறக்க மாட்டார். நாங்களும் உரிமை சார் அரசியலை செய்ய வேண்டும். உரிமைசார் அரசியலில் தமிழ் சமூகம் எங்கயோ போகிவிட்டது. நாங்கள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. கிழக்கு முஸ்லிங்கள் ஒன்றிணைந்து மாமூல் அரசியலை ஓரங்கட்டி அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும். பெருந்தேசிய கட்சிகளின் அஜந்தாக்களுக்கு ஆடும் தலைவர்களின் தலைமைத்துவத்தை நாங்கள் இனியும் ஏற்க முடியாது. முஸ்லிம் வாக்குகளினால் அதிக முஸ்லிம் உறுப்பினர்களை அனுப்பும் கிழக்கை சேர்ந்த நாங்கள் நிலம்சார்ந்த அரசியலை முன்னெடுப்பதில் பிழையில்லை என்று கருதுகிறேன்.

Q : முஸ்லிங்களின் அரசியல் தலைமைத்துவம் கிழக்கில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இப்போதைய தலைவர்கள் முஸ்லிங்கள் செறிந்து வாழும் கிழக்கை சேர்ந்தவர்கள் அல்ல. அதனால் அவர்களுக்கு முஸ்லிங்களின் பிரச்சினைகள் விளங்குகின்றது இல்லை. இவர்களுக்கு தலைமைத்துவத்தை 22 வருடங்கள் கிழக்கு மக்களாகிய நாங்கள் விட்டுக் கொடுத்திருக்கிறோம். அதனை கேட்பதனால் நாங்கள் பிரதேசவாதிகளாக அடையாளப்படுத்தப்பட முடியாது. கிழக்குக்கு தரமாட்டோம் என்று விடாப்பிடியாக இருந்து கொண்டு இருப்பதே பிரதேசவாதம் என்று பார்க்கிறேன். இலங்கை வாழ் வட-கிழக்கு முஸ்லிங்களின் பிரச்சினைகள் வேறு. அரசியல் அதிகாரம் என்பது நிலத்தொடர்பு கொண்டது. வடகிழக்குக்கு வெளியே நிலத்தொடர்பு இல்லாத முஸ்லிங்களின் வாழ்வியலே காணப்படுகின்றது. அவர்களின் அரசியல் நிலைப்பாடு வேறு. முழுமையான முஸ்லிங்களின் வாக்குகளினால் தமது பிரதிநிதிகளை தெரிவும் சந்தர்ப்பம் கிழக்கில் மட்டும்தான் இருக்கிறது. வடகிழக்குக்கு வெளியே எங்குமில்லை. வடகிழக்கு மாகாணத்திற்கு வெளியே மு.கா மற்றும் ம.கா சொந்த சின்னத்தில் போட்டியிட்டு எந்த இடத்திலும் வெல்லவுமில்லை.

மலையக தமிழர்களை தனித்தேசிய இனமாக பிரகடனம் செய்ய வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்திருக்கிறார். முஸ்லிங்களை தனித்தேசிய இனமாக அங்கீகரிக்க செய்ய எந்த தலைவர்களும் எவ்வித முயற்சிகளும் செய்யவில்லை. அஸ்ரப் அதனை தொடர்ந்தும் வலியுறுத்தினார். இப்போதைய தலைவர்கள் சிங்களவர்களுக்கு சாமரசம் வீசும் வேலைகளையே செய்து வருகிறார்கள். கிழக்கில் யாராவது அமைச்சரானால் பொய்யான அல்லது ஏதாவது நாடகத்தை முன்வைத்து கட்சியை விட்டு விலக்கும் பழக்கத்தை ஹக்கீம் கொண்டுள்ளார். அதாஉல்லா, பஷீர் சேகுதாவூத், ஹிஸ்புல்லாஹ், ஹாபீஸ் நஸீர் என அந்த பட்டியல் நீள்கிறது. அதில் ஹரீஸும் இணைந்துவிடுவார் என்ற பயம் அவருக்கு இப்போது வந்து இருக்கிறது.

Q : முஸ்லிங்களுக்கு உள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பில் உங்கள் பார்வை என்ன?

கிழக்கு முஸ்லிங்களின் நிலைப்பாடு வித்தியாசமானது. கிழக்கில் பிறந்தவர்களுக்கே கிழக்கின் பிரச்சினைகள் தெரியும். கடந்த யுத்த கால இழப்புக்களில் ஒரு வீதமாவது அனுபவிக்காதவர்கள் தான் இவர்கள். அகதியாக வெளியானதாக கூறும் றிசாத் பதியுதினையும் ஏனைய அகதிகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள் பல உண்மைகள் விளங்கும். கிழக்கு மக்களை முதன்மைப்படுத்தி முஸ்லிங்களின் உரிமைகளை பெற வேண்டும். எம்.ஐ.எம். முஹைதீனின் ஆய்வின் படி வடகிழக்கு முஸ்லிங்கள் 62 ஆயிரம் ஏக்கர் காணிகளை இழந்துள்ளோம். இது தொடர்பிலான நிறைய தகவல்கள் என்னிடமிருக்கிறது. இது தொடர்பில் வெளிக்கொண்டு வந்தால் தலைவர்கள் கோபிக்கிறார்கள். இனப் பிரச்சினையை தீர்க்காதோர், அகதிகளுக்கு காணி வழங்காதோர், 15 லட்சம் வீடுகளை கட்டித்தருவோம் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாதோர், கண்டியில் முஸ்லிம் பாடசாலை பெற முடியாதோர், கவர்னர் பாகீர் மாகாருக்கு பதில் முஸ்லிம் நியமிக்காதோர், முஸ்லிம் விவாகச் சட்டத்தின் தனித்துவத்தில் கைவைக்க முனைவோர் எம்மை சேர்ந்தவர்களும் அல்ல எமது வாக்குகளும் அவர்களுக்கு அல்ல என தலைவர் அஸ்ரப் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார். அந்த நிலைப்பாட்டில் தான் நாங்களும் இருக்கின்றோம்.

Q : கிழக்கு வாக்காளர்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

கிழக்கு மக்கள் மாமூல் அரசியலிலிருந்து விலக வேண்டும். அடுத்துவரும் 10 வருடங்களுக்காவது கிழக்கு மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டும். தேசிய கட்சிகளுடன் முஸ்லிங்கள் பயணிப்பது சிறந்ததல்ல. தேசிய உணர்வுகள் முதன்மையானதுதான் ஆனால் இலங்கையில் உள்ள தேசிய உணர்வுகள் இனங்களை முன்னிலைப்படுத்தியதாக அமைந்துள்ளது. இங்கிலாந்தில் ஒரு சிறுபான்மையினத்தை சேர்ந்தவர் அண்மையில் பிரதமராக வந்துள்ளார். ஆனால் இலங்கையில் அது சாத்தியமாகுமா? இது விடயமாக பௌத்த மதகுருக்களிடமும் பேசியிருக்கிறேன். இந்த நாட்டின் தலைமை கதிரைகளில் சிறுபான்மையினத்தவர் எப்போது அமர வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதுதான் நாடு ஒளிபெறும். யாப்பில் இனரீதியான பாகுபாடுகள் இல்லை ஆனால் மரபு ரீதியாக இது பயன்பாட்டில் இருக்கிறது.

பெரும் தேசிய கட்சிகளுடன் இணைந்து பயணிக்கும் போது உரிமைகளை சரியாக பெற முடியாது. அவர்கள் பெரும்பான்மை இன வாக்குகளை கவரவே முயற்சிப்பார்கள். ஜனாதிபதி வாக்கெடுப்புக்கு முன்னர் ரணிலுக்கு ஆதரவாக விக்னேஸ்வரன் விடுத்த அறிக்கை மக்கள் மத்தியில் விமர்சனமானது ஆனாலும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கமாட்டேன் என்ற கூற்று சமூகம் சார்ந்ததாக அமைந்திருந்தது. அமைச்சரவை அமைச்சர் நாட்டின் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் அமைச்சராக இருந்து கொண்டு சிறுபான்மையினரின் உரிமைகளை பெற முடியாது என்ற அவரின் கூற்று வலிமையானது. இந்த தெளிவான பார்வை முஸ்லிம் தலைவர்களிடம் இல்லை. அவர்கள் அரசியல் செய்வதே அமைச்சர் கதிரைகளை நோக்கித்தான். அரசுடன் இணைந்து நன்மைபெறுபவர்கள் கொந்தராத்து செய்பவர்கள், அபிவிருத்தியில் சுரண்டல் செய்பவர்கள், தொழில் வாய்ப்புகளை விற்பவர்கள், மக்களின் பணத்தை சுரண்டி மக்களுக்கே கொடுத்து வாக்கு பெறுபவர்கள் தான்.

தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வென்றவர்கள் பின்னர் அது தொடர்பில் எதையும் செய்வதில்லை. மு.கா தலைவர் ஹக்கீம் நகர திட்டமிடல் அமைச்சராக இருந்து கொண்டு அம்பாறை மாவட்டத்தை அரபு நாடுகள் போல மாற்றுவதாக வெல்லாம் மேடைகளில் சூளுரைத்தார். ஆனால் இறுதியில் எல்லாம் புஷ்வாணம். ஒரு கல்லைக்கூட நடவில்லை. கிழக்கு மக்களை மடையர்களாக எண்ணிக்கொண்டே இவர்கள் அரசியல் செய்கிறார்கள். தமிழ் தலைவர்கள் ஜனாதிபதியின் ஆதரவுடன் காணிகளை மீட்க ஆணைக்குழு நியமிக்கும் பணியில் இறங்கியுள்ளார்கள். ஆனால் முஸ்லிம் தலைவர்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள்.

பிரதேச சபை தேர்தல் வரமுன்னரே அரசியல் வியாபாரத்தை முஸ்லிம் கட்சிகள் செய்ய ஆரம்பித்து விட்டது. இனி மாநாடுகள் நடக்கும் அதன் பின்னால் முஸ்லிம் இளைஞர்கள் இழுபட்டு செல்வார்கள். இப்போது விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், மேலங்கிகளும் வழங்கினால் தேர்தலுக்கு பணியாளர்கள் தயார் எனும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். நாங்கள் இளைஞர்களாக இருக்கும் போதுதான் சமூக விடுதலைக்காக உயிர்களை பணயம் வைத்து மு.காவை ஆரம்பித்தோம். இப்போது உள்ள பிராந்திய தலைவர்களிடம் சமூக நோக்கு இல்லாமல் போனதாலையே தான் இந்த நிலை உருவாகியுள்ளது. இதில் மாற்றத்தை கொண்டுவர ஐக்கிய சமாதான கூட்டமைப்பை எதிர்வரும் தேர்தலில் நாட்டின் சகல பாகங்களிலும் களமிறக்க தயாராகி வருகிறோம். இந்த முயற்சி தோல்வியடைந்தாலும் பரவாயில்லை மக்கள் மாற வேண்டும் என்று நினைக்கிறோம்.

Q : மு.கா தலைவர் ஹக்கீம் பற்றிய உங்கள் பார்வை என்ன?

தலைமைத்துவத்திற்கு தகுதியில்லாதவர் அவர். கிழக்கு அரசியல்வாதிகளும், மக்களும் அரசியல் சக்தியாக மேலெழுந்துவிடக்கூடாது என்பதில் ஹக்கீம் எப்போதும் விடாப்பிடியானவர். கிழக்கில் உள்ள ஒவ்வொரு ஊரும் பிரதேசவாதத்தை கொண்டுள்ளதால் அது ஹக்கீமுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. கிழக்கிலிருந்து தலைவர் ஒருவர் வெளிப்பட்டால் அதை கிழக்கின் மற்றுமொரு ஊர் விரும்புவதில்லை இதில் தலைவர் அஸ்ரப் தனது தனிப்பட்ட ஆளுமைகளின் வெளிப்பாட்டால் பிரகாசித்தார். கிழக்கிலிருந்து ஒரு தலைமைத்துவம் பிரகாசித்தால் அவரை உடனடியாக பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி ஹக்கீம் வெளியேற்றி விடுவார். அதாஉல்லா, பஷீர், ஹிஸ்புல்லாஹ், நான் (ஹஸனலி), இப்போது ஹரீஸ் என பட்டியல் நீள்கிறது.

கட்சியிலிருந்து நான் வெளியேற காரணம் தேசிய பட்டியல் விவகாரமும், செயலாளர் பதவி சர்ச்சையுமே. எனக்கு வழங்கிய வாக்குறுதிகளை அப்பட்டமாக ஹக்கீம் மீறினார். அதிகாரம் பொருந்திய செயலாளர் பதவியை தருவதாக பல இடங்களிலும் வைத்து வாக்குறுதி வழங்கிவிட்டு பின்னர் வெற்றுத்தவிசாளர் பதவியை வழங்க போவதாக கூறினார். எனது பதவிக்கான அதிகாரங்களை பிரித்து பங்கிட்டு கட்சிக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்தார். இது உயர்பீடத்தில் பல்வேறு முரண்பாடுகளை தோற்றுவித்தது. எனது பக்கம் நின்று நிறைய உறுப்பினர்கள் நீதிக்காக போராடினார்கள். நான் செய்யவேண்டிய கடமை பொறுப்புக்களை வேறு ஒருவருக்கு தத்துணிவு அதிகாரத்துடன் வழங்கி சமாளிப்புகள் செய்தாலும் அது சட்டப்படி பிழையானதாக அமைந்தது. பின்னர் எங்களின் கட்சியை சேர்ந்த பலரும் வந்து என்னுடன் பல்வேறு விடயங்ககளை முன்வைத்தது பேச்சுவார்த்தைகள் செய்தனர். அது தோல்வியிலையே முடிந்தது. தேர்தல் திணைக்களத்தில் இதுதொடர்பிலான விடயம் ஆராயப்பட்டு அவர் சட்டப்படி என்னுடைய விடயத்தில் முரண்பாடாக நடந்துள்ளார் என்பது நிரூபணமானது. அதனால் கடந்த காலங்களில் நான் செய்திருந்த அர்ப்பணிப்பு மிக்க கட்சிப்பணிகளை நன்றாக அறிந்து வைத்திருந்த தேர்தல் ஆணையாளர் எனக்கு நீதிமன்றத்தை நாட ஆலோசனை வழங்கியிருந்தும் கூட நான் கட்சியை நீதிமன்ற படியேற்ற விரும்பவிலை.

தேர்தல் திணைக்கள சமரச பேச்சுவார்த்தைக்கு கூட நிறைய இழுத்தடிப்புக்களை செய்தார். எனது பிரச்சினையினால் கட்சி தேர்தலை சந்திப்பதில் சிக்கல் இருப்பதனால் இறுதியில் சமரசம் செய்ய முன்வந்து கட்சியின் பிரதித்தலைவர் யூ.டி.எம். அன்வரின் வீட்டில் வைத்து (இறைவனை தொழுது விட்டு ) பல்வேறுபட்ட வாக்குறுதிகளையும், சத்தியங்களையும் செய்தார். தேர்தல் அலுவலகத்தில் வைத்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் இராஜினாமா கடிதத்தையும் என்னிடம் கையளித்தார். எனது நேர்மை, அர்ப்பணிப்பு, கட்சிப்பணி தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஹக்கீமுக்கு மிக ஆழமாக தேர்தல் திணைக்களத்திற்கு வரவழைத்து விளக்கினார். அவர் வழங்கிய வஹ்தாக்கள் ஒன்றும் இறுதியில் நடக்கவில்லை. தான் ஒரு முனாபிக் என்பதை காட்டினார். இதுபோல தான் நிறையபேருக்கு அநியாயம் செய்துள்ளார். அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களே அவரது தனிப்பட்ட குணவியல்வுகளில் அதிருப்தியான நிலையில் இருக்கும் போது நாங்கள் எப்படி அவரை தொடர்ந்தும் நம்ப முடியும். முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் சாபக்கேடு ஹக்கீம். பொதுவெளியில் பேசமுடியாத நிறைய அந்தரங்க விடயங்கள் அவர் தொடர்பில் இருக்கிறது.

இறுதியாக உயர்பீடத்தில் ஐந்து நிமிடம் பேச வாய்ப்பை உருவாக்கி கிழக்குக்கு வரவேண்டிய அமைச்சு பதவி வழங்காமல் ஏமாற்றப்படும் விடயம், செயலாளருக்கு உள்ள அதிகாரங்கள், கிழக்கு மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் விடயங்களை சபைக்கு விளக்கினேன். உடனடியாக எழுந்த ஹக்கீம் கொந்தளித்தார். ஒரு உறையில் இரண்டு கத்திகளை வைக்கமுடியாது. மு.கா சார்பில் நான் மட்டுமே அமைச்சராக இருக்கவேண்டும் என்ற தொனிப்பட கருத்து வெளியிட்டார். அந்த நிமிடமே ஸலாம் கூறி அங்கிருந்து வெளியேறினேன். உலமாக்கள் அடங்களாக பலரையும் எனது வீட்டுக்கு அழைத்து வந்து அவர் முன்வைத்த எந்த விடயங்களையும் நான் செவியேற்கவில்லை. 76 வயதாகும் நான் சுமார் 52 ஆண்டுகள் அரசியலில் இயங்கி வருகிறேன். சமூகத்தை விற்க ஒருபோதும் துணைபோனதில்லை.

Q : கிழக்கு தலைமைத்துவம் தொடர்பிலும், ஹரீஸின் அரசியல் போக்குகள் தொடர்பிலும் உங்கள் பார்வை என்ன?

அது அவர்களின் தனிப்பட்ட விடயம். பகிரங்கமாக நான் கருத்து சொல்ல முடியாது. இருந்தாலும் ஹரிஸ் என்னை சந்தித்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம் ஹரீஸுக்கு ஆலோசனை வழங்கியிருந்தேன். அவரை தலைமைத்துவம் ஏற்கும்படியும் அவருக்கு பின்னால் சென்று அவரை பலப்படுத்தவும் தயாராக இருந்தேன். அதை அவரின் முகத்திற்கு நேரிலையே கூறினேன். இன்றைய அரசியல் அரங்கில் தலைமைத்துவத்திற்கு தகுதியானவராக ஏனையோர்களை விட ஹரீஸை பொருத்தமானவராக காண்கிறேன். ஆனாலும் அவரிடம் தாழ்வுச்சிக்கல் இருப்பதை அவதானித்தேன். நாங்கள் தயாராக இருக்கிறோம். முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் கூட தயாராக இருக்கிறார். தலைவர் அஸ்ரப்புடன் தோளோடு தோளாக இருந்து அரசியல் செய்த எல்லோரும் கிழக்கு தலைமைத்துவத்தை உருவாக்க தயாராக இருக்கிறார்கள்.

ஹரீஸிடம் தலைமைத்துவம் தொடர்பில் அச்சநிலை இருக்கிறது. தலைமைத்துவத்தை வழிநடத்த முடியுமா இல்லையா என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. தலைமைத்துவ சபையொன்றை நிறுவி மக்களுக்கு தெளிவை வழங்கினால் கிழக்கில் மட்டுமல்ல நாடுமுழுவதிலும் மக்களிடமிருந்து நிறைய வரவேற்பு கிடைக்கும். தலைமைத்துவத்தை கோரி சிரேஷ்ட அரசியல்வாதிகளும், ஹரீஸ் போன்றோர்களும் முன்வந்தால் மக்கள் பின்னால் வருவார்கள். எல்லா இடங்களிலும் ஒழுங்கான தலைமைத்துவ தாகம் இருக்கிறது.

Q : இலங்கை அரசியல் மற்றும் நிர்வாகத்தில் வெளிநாட்டு தலையீடுகள் இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

வெளிநாட்டு தலையீடுகள் பற்றி அடிக்கடி சிலாகித்து பேசிவரும் நமது நாட்டு தலைவர்கள் தங்களது கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டு கிடக்கிறது என்று வாதிடுபவர்கள் . இவர்கள் உட்பட இந்த நாட்டில் மாறிமாறி இதுவரை ஆட்சி செய்தவர்கள் இந்த நாட்டை ஒரு தோல்வியடைந்த நாடாக பிச்சை எடுக்க வைத்ததனை மறந்து விட்டார்கள் . வெளிநாடுகளிடம் கையேந்திப்பிழைக்கும் நிலைமைக்கு இந்த நாட்டை சீர்குலைத்தவர்கள் இனிமேலும் வெளிநாட்டு தலையீட்டை பற்றி இழிவாக பேசக்கூடாது வெளிநாட்டு தலையீட்டினால் மட்டுமே இனிமேல் நாம் நிமிர்ந்து நிற்க முடியும் என்பதனை இனியாவது இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் .

தேர்தல் முறை மாற்றம், அரசியல் யாப்பு மாற்றம் என்பன பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு (அரசாங்கத்துக்கு ) எந்த அருகதையும் கிடையாது. மக்களை மடையர்களாக்கி அவர்களை பொய் வாக்குறுதிகளால் மயக்கி மெகா ஊழல்களை செய்து குடும்பம் கோத்திரம் என்ற குறுகிய வட்டங்களுக்குள் தம்மை வகைப்படுத்திக்கொண்டு தங்களுக்குத் தேவையான வகையில் சட்டங்களையும் யாப்புகளையும் படைத்துக் கொண்டு அவற்றை சட்டமாக்க தேவையான பெரும்பான்மையை றெடிமேட் ஆக பெற்றுக்கொள்ள உதவிய கட்சிகளும் பிரதிநிதிகளும் இனிமேல் வெளிநாட்டு தலையீடுகள் பற்றி பேசுவதற்கும் வீரவசனங்கள் பேசி அப்பாவி வாக்காளர்களை வலை வீசுவதற்கும் வாய் திறக்க கூடாது.

ஏனெனில் வெளிநாட்டு உதவிகள் மூலம் மட்டும்தான் நாம் இனி எழுந்து நிற்க முடியும் என்ற நிலைமைக்கு இந்த நாட்டை இட்டுச்சென்றவர்கள் நீங்கள்தான் . இனிவரப்போகும் யாப்பு மாற்றங்கள், சட்ட வரைபுகள் தேர்தல் முறை மாற்றங்கள் அனைத்தும் துறைசார்ந்த வெளிநாட்டு வல்லுனர்களின் ஆலோசனைகள் பெற்று நிரந்தர தீர்வாக அமையவேண்டும். உள்நாட்டு பொறிமுறைகள் எல்லாமே தோல்வியடைந்து விட்டதனை ஏற்றுக்கொள்ளாது. விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்ற விம்பு இனித்தேவையில்லை. ஒரு பொதுத்தேர்தலை மட்டும் நடத்தி புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களிடம் நிர்வாகத்தையும் நாட்டையும் பாரப்படுத்திவிட்டு கரை ஏறுவதை தவிர வேறு எதனையும் இந்த நாட்டு மக்கள் அரசியல் தலைவர்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை . தோல்வியை ஒத்துக்கொண்டு இடத்தை காலி பண்ணுவது தான் இந்த மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் சிறந்த பணியாகும்.

Q : மு.காவின் பேராளர் மாநாட்டில் இரு எம்.பிக்களுக்கு மன்னிப்பு வழங்கியது தொடர்பில் முன்னாள் செயலாளரான நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டில் மன்னிப்பு நாடகம் அரங்கேறியது மக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியொன்றில் தோன்றி மு.காவின் இப்போதைய செயலாளர் நிஸாம் காரியப்பர் 20க்கு ஆதரவளித்த மற்றும் கட்சி கட்டுக்கோப்புகளை மீறிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வகையான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறார்கள் என்பதை பகிரங்கமாக தெரிவித்தார். மட்டுமின்றி அக்கட்சியின் தலைவரும் பல சந்தர்ப்பங்களில் அந்த எம்.பிக்களுக்கு எதிராக கடுமையாக கருத்துரைத்து ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்போவதாகவும் கூறிவந்தார். இறுதியாக நடந்த உச்சபீட கூட்டத்திலும் பல உச்சபீட உறுப்பினர்கள் இவர்களை இணைக்க கூடாது என்றும் மன்னிப்பு வழங்க கூடாது என்றும் வாதிட்டுள்ளனர். கட்சியின் பின்னடைவுக்கு தலைவர்தான் காரணம் எனும் வாதம் அங்கும் எழுந்துள்ளது. அதையெல்லாம் தாண்டி தத்துணிவில் அவர் முடிவுகளை எடுக்கிறார் என்றால் அந்த எம்.பிக்களுக்கும் இவருக்கும் இடையில் இருக்கும் ரகசியங்கள் தொடர்பில் இவருக்கு அச்சம் இருப்பது விளங்குகிறது.

அமைச்சர் நஸீர் அஹமட் வெளிப்படையாகவே ஹக்கீமை விசாரணைக்கு அழைக்க கோரினார். எல்லா எம்.பிக்களும் இணைந்து ஹக்கீம் தான் எங்களை ஆதரவளிக்க சொன்னார் என்று உண்மைகளை மக்களிடம் ஒப்புவித்தால் ஹக்கீமுக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும். அதனால்தான் துணிந்து எம்.பிக்களை மீண்டும் கட்சிக்குள் உள்வாங்கும் முடிவை எடுத்தார். இந்த துணிச்சலான முடிவை எடுக்கும் தைரியம் அவருக்கு இருப்பதாக நான் பார்க்கிறேன். இந்த நிலை தலைவர் அஷ்ரபின் காலத்தில் இருக்கவில்லை. இறுதிமுடிவை எடுக்கும் அதிகாரம் உயர்பீடத்திற்கே இருந்தது.

தலைவர் அஷ்ரபின் காலத்தில் மு.காவின் உச்சபீடத்தில் 27 பேர்தான் இருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் அரசியலின் உச்சபச்ச அனுபவமும், அறிவும் இருந்தது. ஆனால் இப்போதைய மு.கா உச்சபீடத்தில் 113 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதிலும் 58 சதவீதமானவர்களை தலைவர் தனியாக நியமிக்கலாம் என்று யாப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் அவரால் நியமிக்கப்பட்ட நிறையபேர் அவர் சொல்வதெல்லாம் சரி என்று கூற எப்போதும் தயாராக இருக்கிறார்கள். வாக்காளர்கள் இப்போது முஸ்லிம் காங்கிரஸில் எதிர்பார்ப்பது மரம் ஒன்று இருக்க வேண்டும். அஷ்ரபின் படம் ஒன்று இருக்க வேண்டும். ஆதவன் பாட்டு இருக்க வேண்டும் அவ்வளவுதான். இவ்வளவும் இருந்தால் அது பூரண முஸ்லிம் காங்கிரஸாக ஏற்று கொள்கிறார்கள். உள்ளார்ந்தமாக யாரும் சிந்திக்கிறார்கள் இல்லை. இதுவே மக்களின் பிழையான நடவடிக்கையாக அமைந்துள்ளது.

Q : உங்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு யாப்பு என்ன சொல்கிறது, நிர்வாகிகள் யார் ?

எங்களின் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் யாப்பு அஷ்ரபின் யாப்பு. தலைவர் அஸ்ரப் மரணிக்க முன்னர் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுக்கு வைத்திருந்த அதே யாப்பைத்தான் நாங்கள் எங்களின் ஐக்கிய சமாதான கூட்டமைப்புக்கு வைத்திருக்கிறோம். எங்களின் யாப்பை தேர்தல் திணைக்களத்திற்கு தகவலறியும் சட்டத்தின் மூலம் யாரும் கோரிப்பெற்று பார்வையிடலாம். அதில் தலைவர் என்ற இடத்திற்க்கு பதிலாக 11 பேரைக் கொண்ட தலைமைத்துவ சபை என்ற ஒன்றை மாற்றியமைத்துள்ளோம். தலைவர் அஷ்ரபிற்கு நிகரான தலைவர் முஸ்லிம் சமூகத்தில் இல்லாதமையினால் இந்த மாற்றத்தை செய்துள்ளோம். எங்களின் கட்சியில் தனிநபர் ஒருவர் இறுதி முடிவை எடுக்க முடியாது. பதவி வழியில் தவிசாளர் (பஷீர் சேகுதாவூத்), செயலாளர் நாயகம் (ஹஸனலி), பிரதித்தலைவர் (மிப்ளால் மௌலவி), நஸார் ஹாஜியார், பிரதிச்செயலாளராக ஹாரீஸ் உதுமாலெப்பை, பொருளாளராக ஹலீலுர் ரஹ்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். நிஜாமுதீன், முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் போன்ற பலரும் எங்களின் கட்சியில் இருக்கிறார்கள். ஐக்கிய சமாதான கூட்டமைப்பை எதிர்வரும் தேர்தலில் நாட்டின் சகல பாகங்களிலும் களமிறக்க தயாராகி வருகிறோம்.- .என்றார்.


No comments: