News Just In

9/07/2022 01:48:00 PM

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படாமைதொடர்பாக கல்வி அமைச்சருக்கு கடிதம்.





2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களம் வெளியிட்டிருந்த போதிலும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு இதுவரை கொடுப்பனவு வழங்கப்படாமை குறித்து இலங்கை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து கடிதம் ஒன்றினை கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


தேசிய ரீதியில் குறிப்பாக பரீட்சை திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
எனினும் ஒதுக்கப்பட்ட மற்றும் அதற்கேற்ப வழங்குவதற்கென அனுமதிக்கப்படும் கொடுப்பனவுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்துள்ள செலவினங்களை நோக்கும் போது வழங்கப்படும் கொடுப்பனவானது எவ்விதத்திலும் போதுமானது அல்ல. பொருளாதாரப் பிரச்சினைகள் மத்தியிலும் தமது கடமைகளைப் பொறுப்புணர்வுடன் செவ்வனே நிறைவேற்றிய ஆசிரியர்களுக்கு பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் பொறுப்பற்றுச் செயறாபடுவது கவலைக்குரிய விடயமாகும்.


இன்று நிலவும் கடினமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மனம் தளராமல் கடமைகளை நிறைவேற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறும் பல தசாப்தங்களாக பொது மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டு அதனால் ஏற்பட்ட பாதிப்பால் மக்கள் கிளர்ந்து எழுந்து போராடிய போது அரசியல் வாதிகளின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உடனடியாக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவ்வாறெனில் ஏன் ஆசிரியர்களுக்கு ஒதுக்க முடியவில்லை எனவும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் பரீட்சை நடவடிக்கைகளை மேற்கொள்வது சவாலாக அமையும் எனவும் உரிய ஆசிரியர்களுக்கு உடனடியாக கொடுப்பனவு நிதியை ஒதுக்குமாறும் அவ்வாறு செய்யாதவிட்டத்து ஒன்றிணைந்த ஆசிரிய சங்கங்களாக இது தொடர்பாக மேலதிக செயற்பாடுகளை முன்னெடுப்போம் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளதாக பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
S. Pradeep


No comments: