News Just In

8/10/2022 09:52:00 AM

வடக்கு, கிழக்கில் கூட்டுறவு துறை மூலம் மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு புலம்பெயர் உறவுகள் இதய சுத்தியுடன் பங்களிப்பு - சமாச தலைவர் லோகநாதன் பாராட்டு




நூருல் ஹுதா உமர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கூட்டுறவு துறை மூலமாக எமது மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு நெதர்லாந்து, கனடா, சுவிஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் உறவுகள் மிக காத்திரமான பங்களிப்புகளை இதய சுத்தியுடன் வழங்கி வருகின்றனர் என்று கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுற சங்க சமாசங்களின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

காரைதீவில் சுய தொழில் முயற்சியாளர்களுடன் கடந்த ஒரு மாதமாக பல சந்திப்புகளை மேற்கொண்டு வேலை திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்ற லோகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தவை வருமாறு

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கூட்டுறவு துறை பிரகாசிக்கின்றது. அங்கு உள்ள மக்கள் கூட்டுறவு துறையின் நன்மைகளை அனுபவிக்க கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கூட்டுறவு துறை மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த புலம்பெயர் உறவுகள் அர்ப்பணிப்புடன் முன்வந்து உள்ளார்கள். ஏராளமான வேலை திட்டங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புலம்பெயர் உறவுகளின் நிதி பங்களிப்புகளுடன் முன்னெடுக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

அரசாங்கத்திடம் நாம் நிதி கேட்கவில்லை. தார்மீக ஆதரவை அது வழங்கினால் போதும். அதற்காக அரசாங்க அலுவலகங்கள் தூங்கி கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது. அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரை நாவிதன்வெளி, சொறிக்கல்முனை, பாண்டிருப்பு, கல்முனை, மல்லிகைத்தீவு என்று பல பிரதேசங்களிலும் வேலை திட்டங்களை ஆரம்பித்து இருக்கின்றோம். அடுத்த வேலை திட்டத்தை காரைதீவில் முன்னெடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்து வருகின்றோம். எமது வேலை திட்டங்களில் சுய தொழில் ஊக்குவிப்பு, சேமிப்பு ஆகியன பிரதான அம்சங்களாக இருக்கின்றன.

வீட்டு தோட்டம், நெசவு, மீன்பிடி, குடிசை கைத்தொழில்கள் போன்றவற்றை ஊக்குவித்து வருகின்றோம். காரைதீல் மீன்பிடி துறையை ஊக்குவிப்பதை பிரதான வேலை திட்டமாக உத்தேசித்து உள்ளோம் என்றார்


No comments: