News Just In

7/18/2022 07:36:00 PM

IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை!

இன்றைய தினம் ஹட்டன், குயில்வத்தை உள்ளிட்ட ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது. ஹட்டன் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக வரிசையிலிருந்து வாகனங்களுக்கு ஹட்டன் பொலிஸாரால் டோக்கன்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டு பெற்றோல் வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதே நேரம் குயில்வத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வட்டவளை பொலிஸார் வாகனங்களை வரிசைப்படுத்தி முறையாக எரிபொருள் வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஒரு சிலர் கொள்கலன்களுக்கு எரிபொருள் வழங்குவதாக தெரிவித்து பொலிஸாருடன் முரண்பட்டனர்.

இதனால் குறித்த நிலையத்தில் சில நிமிடங்கள் அமைதியின்மை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பொலிஸார் எரிபொருள் பெற வந்தவர்களுடன் கலந்துரையாடி நிலைமையினை அமைதிக்கு கொண்டு வந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்திடம் வினவிய போது, நாங்கள் முடிந்தளவு மிகவும் நேர்மையாக செய்கிறோம். அரசாங்கம் உற்பத்தி துறையில் ஈடுப்படுபவர்களுக்கும் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பாற்பண்ணை ஒன்றுக்கு கொள்கலனில் எரிபொருள் பெற்றுக்கொண்டதற்காகவே இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தொழில் துறைகள் பாதுகாப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறானவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு விசேட அனுமதியினை பெற்றுக்கொடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்;.

இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் மேற்கொண்ட போதிலும் வரிசையில் நின்ற பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கவில்லை என பலரும் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க ஒரு சிலர் தற்போது எரிபொருள் நிரப்புவதனை ஒரு தொழிலாக கொண்டுள்ளதாகவும் இதனால் ஒவ்வொரு தடவையும் எரிபொருள் வரும் போது வரிசையில் நின்று பெற்றுக்கொள்வதாகவும் அதனை கூடிய விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டுவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

இதனால் அதிகமான முச்சக்கரவண்டி சாரதிகள் சவாரி செய்வதற்காக எரிபொருளை நிரப்பி அதனை கூடிய விலைக்கு விற்பனை செய்து விட்டு வரிசையில் நிற்பதனை தொழிலாக கொண்டுள்ளதாக பலர் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே அரசாங்கம் அமுல் படுத்த உள்ள உரிபொருள் உரிமத்தினை உடன் அமுல் படுத்தி அனைவரும் எரிபொருள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments: