News Just In

4/02/2022 04:49:00 AM

அடிப்படைவாதப் போதனைகளை பாடசாலைப் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்குவதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது...


இலங்கையின் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள அடிப்படைவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இட்டுச் செல்கின்ற போதனைகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளில் இருந்து தமது பிள்ளைகளை பாதுகாத்துத் தருமாறும் மிதவாதப் போக்குடைய முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ். எச். ஹரிச்சந்திர ஆகியோர் “ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான” ஜனாதிபதி செயலணியுடன் கடந்த, 30ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

குழந்தைகளின் மனதை சிறுவயதிலிருந்தே சரியாக வளர்த்தால், சிறந்த குடிமக்களை உருவாக்க முடியும் என்றும், வெளிநாட்டு அடிப்படைவாத சிந்தனைகள் பாடசாலை பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள விடயங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அனைத்து வருடங்களுக்குமான பாடத்திட்டங்களில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களில் அச்சிடப்பட்டுள்ள பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகளில் "இஸ்லாம் மார்க்கம் மற்றும் கலாசாரம்" கீழ் அடிப்படைவாத போதனைகள் இருப்பதாக ஜனாதிபதி செயலணியினால் அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமாக முன் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளடங்காத சவுக்கடி வழங்குதல், ஏனைய மதத்தினரை இஸ்லாத்திற்கு மாற்ற பணம் கொடுத்தல், வயது முழுமையடையாத பெண் பிள்ளைகளை திருமணம் செய்தல், சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்பவை போன்ற விடயங்கள் பாடப் புத்தகங்களில் உள்ளடங்கி இருப்பதாக செயலணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். மூன்று தலாக் விவாகரத்து நடைமுறை, தமது மனைவியை அடிக்க முடியும் என்பவை போன்ற சிறுபிள்ளைகளின் மனதுக்குப் பொருந்தாத போதனைகளும் இந்த பாடப்புத்தகங்கள் மற்றும் கையேடுகளில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலணி மற்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட மிதவாத முஸ்லிம் நிபுணர்கள் குழுவும் உதாரணங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எகிப்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதத் தலைவரான யூசுப் அல் கர்ளாவி எழுதிய புத்தகங்களும் ஆசிரியர் கையேடுகளில் கூடுதல் வாசிப்பாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

முஸ்லிம்கள் அடங்கிய குழுவினால் இதற்கு முன்னர் இந்தப் பாடப் புத்தகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பிழைகள் அங்கு தெரியாவிட்டாலும் அவற்றை உடனடியாக திருத்தப்பட வேண்டுமென தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.

அல் குர்ஆன் வசனங்களுக்கு சரியான விளக்கத்தை வழங்காமையே இதற்கு ஒரு காரணம் என ஜனாதிபதி செயலணி உறுப்பினர் மொஹமட் மௌலவி தெரிவித்துள்ளார். இந்த பிழையை உடனடியாக சரி செய்து, நாட்டிற்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற பாடத்திட்டத்தை உடனடியாக தயாரிக்க வேண்டும் என்று செயலணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மிதவாத முஸ்லிம் சிந்தனைவாதிகள் தெரிவித்துள்ளனர்.

பாடப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகளில் உள்ள அனைத்து அடிப்படைவாத போதனைகளையும் கண்டறிந்து, ஆவணப்படுத்தி, கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர்களின் கோரிக்கையை ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணி ஏற்றுக்கொண்டது.

செயலணியின் கல்வி உபகுழுவானது ஆய்வு செய்து, பாடநூல்களைத் திருத்துவதற்கும் அடிப்படைவாதப் போதனைகள் பாடசாலைப் பாடத்திட்டத்தில் நுழைவதைத் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஏப்ரல் 07ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளது.

இலங்கையில் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கருத்தியலை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை கருத்திற்கொண்டு, அந்தக் கருத்தியலை ஆய்வு செய்ததன் பின்னர், நாட்டில் அதனை அமுல்படுத்துவது தொடர்பான கருத்தியல் பத்திரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் சமர்ப்பிக்க, வண.கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, இதுவரை நாட்டின் பல்வேறு மாகாணங்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய வகையில் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிதல் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று வருகின்றது.

கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் பி.என். அயிலப்பெரும உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

“ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான” ஜனாதிபதி செயலணியின் தலைவர் ராஜகீய பண்டித்த வண. கலகொட அத்தே ஞானசார தேரர், உறுப்பினர்களான மொஹமட் மௌலவி, அசீஸ் நிசார்தீன், பேராசிரியர் சாந்தி நந்தன செனவிரத்ன, வைத்தியர் சுஜீவ பண்டித்தரத்ன, சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தன, சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன, எரந்த நவரத்ன, பாணி வேவல ஆகியோருடன் அதன் செயலாளர் செல்வி ஜீவந்தி சேனாநாயக்க மற்றும் அச்செயலணியின் கல்வி உப குழுவின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments: