News Just In

4/05/2022 05:29:00 AM

பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் நேற்று (04) காலமானார்.


பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் தமது 78 ஆவது வயதில் நேற்று (04) காலமானார்.ஹம்பாந்தோட்டைக்கு தமது குடும்பத்தினருடன் சென்றிருந்த நிலையில், அன்னார் நேற்று (04) காலை காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அன்னாரின் பூதவுடல் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.தமிழ் கல்வி வளர்ச்சிக்காக செயற்பட்ட பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம், பதுளையை பிறப்பிடமாகக் கொண்டவர்.

யாழ். மகாஜனா கல்லூரியில் உயர்தர கல்வியை கற்ற அன்னார், பேராதனை பல்கலைக்கழத்திற்கு தெரிவாகினார்.பல்கலைக்கழக கல்வியின் பின்னர் தென் மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றியதுடன், பின்னர் இலங்கை மத்திய வங்கியில் மொழிபெயர்ப்பாளராக இணைந்து கொண்டார்.

அதன் பின்னர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளராகவும் கொழும்பு பல்கலைக்கழக கல்விப் பீடத்தின் விரிவுரையாளராகவும் கல்விப் பணியை தொடர்ந்தார்.

இதனை தொடர்ந்து ஜப்பான் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணி பட்டத்தை நிறைவு செய்ய பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம், அதன்பின்னர் கல்விப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

இறுதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தின் பீடாதிபதியாகவும் அன்னார் செயற்பட்டார்.மலையக வரலாற்றில், இரண்டாவது பேராசிரியராகவும் முதலாவது கல்விப் பேராசிரியராகவும் பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் விளங்கினார்.

அத்துடன், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் பேரவை உறுப்பினராகவும் அன்னார் செயற்பட்டுள்ளார்.

தமிழ் கல்வித் துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்விசார் கட்டுரைகளையும் சுமார் 35 கல்வியியல் சார் நூல்களையும் பேராசிரியர் வௌியிட்டுள்ளார்.

கொழும்பு தமிழ் சங்கத்தின் தலைவராக செயற்பட்ட பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம், இறுதியாக பேரவை உறுப்பினராக செயற்பட்டார்.அன்னாரின் மறைவு தமிழ் கல்வித்துறைக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

No comments: