News Just In

3/05/2022 07:06:00 AM

ரஷ்ய துருப்புகளால் தகர்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானத்தின் தற்போதைய நிலை !

ரஷ்ய துருப்புகளால் தகர்க்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதே நிலையில் ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.

இரு நாட்டின் மோதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய துருப்புக்களை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், ரஷ்ய துருப்புக்கள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன.

இதேவேளை, உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் ’அண்டனோவ் 225 மிரியா’ கடந்த 28 ஆம் திகதி ரஷ்ய இராணுவத்தினரின் தாக்குதலில் தகர்க்கப்பட்டது.

6 எஞ்சின்கள், 314 டன் எடைகொண்ட இந்த சரக்கு விமானம் கொரோனா பரவல் காலத்தில் உலகம் முழுவதும் மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல பெருமளவு உதவி செய்தது.

இந்த சரக்கு விமானம் ரஷ்யப் படையினரின் தாக்குதலில் தற்போது பெருமளவு தகர்க்கப்பட்டுள்ளது. விமானத்தை சீரமைக்க 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு செலவு ஏற்படலாம் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.




No comments: