News Just In

1/02/2022 06:56:00 AM

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நசீர் அகமட் எம்.பிக்கு சாட்டையடி!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தொலைக்காட்சி நிகழ்வொன்றில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகத்தினை அரச பயங்கரவாதம் என்று கூறி மிக மோசமான முறையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாடியிருந்தார். அத்தோடு சில பிரதேச செயலகங்கள் தொடர்பாகவும் கருத்துகளை முன்வைத்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தொடக்கம் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் நிர்வாக பயங்கரவாதத்தினை மேற்கொள்வதாக கூறியிருந்தது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அந்த விடயம் தொடர்பில் அவர் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.

நாடாளுமன்றத்தில் கூட அவர் நிர்வாக பயங்கரவாதம் என்பதை கூறியிருந்தார். அதனை தொடர்ந்து பொதுவெளியில் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியின்போதும் இவ்வாறான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

காணிக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபரின் பெயரை குறிப்பிட்டு காணிகளை அபகரிப்பதாகவும், முஸ்லிம்களுக்கு வழங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவரை நிர்வாக பயங்கரவாதியாக சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

கடந்த 2018ஆம் ஆண்டுதான் அவர் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அவரை 12 வருடங்களாக இவ்வாறன செயற்பாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார். அவர் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்திருந்தார். அவர் எந்தவித இனவாதமோ, மதவாதமோயின்றி செயற்படும் ஒரு மேலதிக அரசாங்க அதிபர். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அடித்துவிரட்டி காணிகளை அபகரித்தாக கூறியிருந்தார். எந்த பாரபட்சமுமின்றி அரச நிர்வாகத்தினை மேற்கொள்கின்ற மாவட்ட நிர்வாகத்தினை இவ்வாறு கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. உண்மைக்கு புறம்பான விடயங்களை பேசுவது வேதனைக்குரிய விடயம்.

சந்திரிகா பண்டார நாயக்க அவர்களது காலத்தில் கொண்டுவரப்பட்டது பண்ணம்பல அறிக்கையாகும். அது வர்த்தமானியல்ல. முன்னாள் அமைச்சர் அஸ்ரப் இது தொடர்பான பிரேரணையொன்றையும் கொண்டுவந்திருந்தார். அந்த காலப்பகுதியில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று மத்தி எட்டு கிராம சேவையாளர் பிரிவுடன் உருவாக்கப்பட்டது.

பண்ணம்பல அறிக்கையென்பது யுத்தகாலத்தில் செய்யப்பட்ட ஒன்றாகும். அந்த காலத்தில் ஆளுந்தரப்பில் அதிகாரமிக்கவர்களாக முஸ்லிம் அமைச்சர்கள் இருந்த காலகட்டம். அக்காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள், நிர்வாகம் சார்ந்தவர்கள் பேசுவதற்கே அச்சப்படும் காலகட்டம். அக்காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் அரசாங்கத்திலிருந்த செல்வாக்கினை வைத்துக்கொண்டு இவ்வாறான விடயங்களை நிறைவேற்றினார்கள். அதிலொன்றுதான் இந்த பண்ணம்பலான அறிக்கையாகும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் புனானை கிழக்கு பகுதியும், காராமுனையும் உள்ளது. அதன் நிர்வாகமும் வாகரை பிரதேச செயலகம் முன்னெடுத்துவருகின்றது. இதனை கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுக்கின்றனர். இன்று புனானை கிழக்கு பிரதேசம் கோறளைப்பற்று வடக்கில் இருந்தாலும் ரிதிதென்ன போன்ற சில கிராமங்களில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நிர்வாகம் செய்கின்றது.

அதேபோன்று பல தமிழ் கிராமங்கள் அதில் உள்ளன. கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என கூறும் பல பகுதிகள் முழுக்கமுழுக்க தமிழர்கள் வாழும் பகுதி. தமிழ் பகுதிகளையெல்லாம் இணைத்து கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்.

மயிலங்கரச்சி கோறளைப்பற்று மத்தியில் காணப்படும் தமிழ் கிராமமாகும். அப்பகுதி மக்கள் தங்களுக்கு கோறளைப்பற்று மத்தியுடன் நிர்வாக ரீதியாக இருக்க விரும்பம் இல்லையென்று கடிதம் தந்துள்ளார்கள். அதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பகுதிகளின் நிர்வாகத்தினை ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் முன்னெடுக்கின்றது. அதனையே மயிலங்கரைச்சி மக்கள் கோருகின்றனர்.

தியாவட்டுவான் இன்றும் கோறளைப்பற்று மத்தியுடனேயே உள்ளது. ஆனால் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் அது கோறளைப்பற்று வடக்குடன் உள்ளதாக கூறுகின்றார். இது கூட தெரியாதவராகவே அவர் இருக்கின்றார். பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சியின் தலைவர் தியாவட்டுவான் கிராம சேவையாளர் பிரிவு எங்கு இருக்கின்றது என்று கேட்டு தெரிந்தாவது பேசியிருக்க வேண்டும்.

நிலத்தொடர்பு இல்லாமல் மட்டக்களப்பில் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் கூறியிருந்தார். நிலத்தொடர்புபற்றி பேசுவதற்கு இவர்களுக்கு எந்த அருகதையுமில்லை. மட்டக்களப்பில் உள்ள நான்கு கல்வி வலயங்கள் புவியியல் ரீதியாக நிலத்தொடர்புடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலேயே முதன்முறையாக புவியியல் தொடர்பு இல்லாமல் கல்வி வலயம் ஒன்றை உருவாக்கிகாட்டியவர்கள் இவர்கள்தான். முஸ்லிம் பகுதிகளை இணைத்து நிலத்தொடர்பற்ற நிலையில் ஒரு கல்வி வலயம் உருவாக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம் என்ற போர்வையில் இலங்கை தமிழரசுக்கட்சி இவர்களுடன் இணைந்து பயணிக்க முடியும். ஆனால் எமது அரசியல் பயணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாரில்லை. கடந்த 72 வருடமாக எமது தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த இணக்க அரசியல் என்று சென்று கொண்டிருப்பதனால் கிழக்கு மாகாணத்தில் நில ரீதியாக, வள ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிப்பினை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

கோறளைப்பற்று மத்தியுடன் 240 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு இணைக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிலப்பரப்பு எங்குள்ளது. வாகரையின் அரைவாசிப்பகுதியை இணைக்கவேண்டும் என்ற நோக்குடனேயே இவர்களின் செயற்பாடுகள் உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களை கோறளைப்பற்றுடன் இணைக்கவேண்டும் என்கின்ற பண்ணம்பல அறிக்கையினை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதில் எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாரில்லை. நீங்கள் ரிதிதென்ன, ஜயந்தியாய பகுதிகளை கோறளைப்பற்று மத்தியில் நிர்வாகம் செய்கின்றீர்கள். ஆனால் அங்கிருக்கின்ற எட்டுக் கிராமங்களில் ஆறு கிராமங்கள் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ்க் கிராமங்களாகும். இவற்றை நாங்கள் எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை. மக்களும் அதனை விரும்பமாட்டார்கள்.

240 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு என இவர்கள் சொல்வது கிட்டத்தட்ட வாகரை பாரம்பரிய தமழர்களின் கிராமங்களை இல்லாமல் செய்கின்ற ஒருவகையான செயற்பாடாகும். இப்படித்தான் நாங்கள் அம்பாறையிலும், திருகோணலையிலும் பலவற்றை இழந்தோம். இது பேசித் தீர்க்க வேண்டிய விடயமல்ல, அதற்கு அவசியமும் இல்லை. இது எங்களுக்கென்றே இருக்கின்ற விடயமாகும். விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து நாங்கள் நில ரீதியாகவும், வள ரீதியாகவும் குறைந்துகொண்டே செல்கின்றோம்.

கோறளைப்பற்று வடக்கிற்குள் இருக்கின்ற காரமுனை பகுதி தொடர்பாக அண்மையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உட்பட கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். அவர்கள் அதனை விளங்கிக்கொள்கின்றார்கள். அங்கு முஸ்லிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாக சாணக்கியன் கூறுகின்றார். காராமுனை பகுதியில் சிங்களவர்கள் இருந்ததற்கான எந்த ஆவனங்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.

No comments: