News Just In

1/27/2022 10:47:00 AM

போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விடயங்களை கட்டுப்படுத்தி முகாமைத்துவம் செய்தல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்


நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விடயங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்தி முகாமைத்துவம் செய்தல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலொன்று நேற்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஸகி தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலை ஆரம்பமாகும் நேரம், முடிவுறும் நேரங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டது. பாடசாலைகளில் இதற்கென உப குழுக்கள் நியமிக்கப்பட்டு போக்குவரத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் போக்குவரத்தினை சீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் போக்குவரத்து நெரிசலினால் பொதுமக்கள், மாணவர்கள் எதிர்கொண்டிருக்கும் அசௌகரியங்களை குறைக்கும் வண்ணம் ஆலோசனைகள், தீர்மானங்களை முன்னெடுக்கும் போக்குவரத்து குழு இக்கூட்டத்தின் போது நியமிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் எம்.ஏ. சஜீர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments: