News Just In

1/01/2022 07:20:00 PM

இலங்கையில் நூற்றுக்கு 12 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளதாக எதிர்வு கூற முடியும் : விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் ஒமிக்ரோன் பிறழ்வு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் நூற்றுக்கு 12 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளதாக எதிர்வு கூற முடியும் என விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.

இது ஒமிக்ரோன் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது என்பதற்கான சிறந்த சாட்சியாகும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் சுமார் 170 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நூற்றுக்கு 12 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளது என்று எதிர்வு கூற முடியும். நாட்டில் ஒமிக்ரோன் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது என்பதற்கு இது சிறந்த சான்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதே வேளை மூன்றாம் கட்ட தடுப்பூசியின் முக்கியத்துவமும் இதன் மூலம் வெளிப்படுகிறது. எவ்வாறிருப்பினும் டெல்டாவுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரோன் வைரஸால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறைவாகும் என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளானால் பாதிப்படையக் கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் எந்த வைரஸாக இருந்தாலும் ஆபத்தை உணர்ந்து, சுகாதார தரப்பினரால் வெளியிடப்படுகின்ற பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறும் அவர் இதன்போது பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

No comments: