News Just In

11/28/2021 02:40:00 PM

ஏறாவூர் நகர் பொருட்கள் கொள்வனவு செய்ய இலாபகரமான இடம் என்ற நாமத்தை வர்த்தகர்கள் பெற்றுத்தர வேண்டும் : ஏறாவூர் நகர முதல்வர் நழிம் வேண்டுகோள்

தமக்குத் தேவையான சகல பொருட்களையும் இலாபகரமாக வாங்குவதற்கு பொருத்தமான இடம் ஏறாவூர் நகரம்தான் என்ற நாமத்தை பெற்றுத்தர வர்த்தகர்கள் முயற்சிக்க வேண்டும் என ஏறாவூர் நகர சபையின் முதல்வர் எம்.எஸ். நழிம் வேண்டுகோள் விடுத்தார்.

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் தற்காலிகமாக இயங்கி வரும் பொதுச்சந்தையில் கடைகள் சீரமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தி வியாபாரிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை 28.11.2021 நகர சபையின் செயலாளர் எம்.ஆர். ஷியாஹுல் ஹக் தலைமையில் சனிக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது. சுமார் 12 இலட்ச ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட மரக்கறி மீன் இறைச்சி கருவாடு பல சரக்கு கடைகள் என சுமார் 90 வர்த்தக நிலையங்கள் சந்தை வியாபாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஏறாவூர் நகர முதல்வர் நழிம் நான் தவிசாளராகப் பொறுப்பேற்று பத்து மாதங்களே கடந்திருக்கின்றன. அதற்குள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமும் வந்து விட்டது.

கொவிட் செயலணியின் பேசுபொருளாக இந்த பொதுச் சந்தைதான் இருந்து வந்தது. தற்போது ஏறாவூரின் மொத்த சில்லறை வியாபாரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறாவூரின் பொருளாதாரமே இந்தப் பொதுச் சந்தையையும் ஏறாவூர் வர்த்தக நகரையும் நம்பித்தான் இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த ஊர் வியாபாரத்திலே கொடிகட்டிப் பறந்தது.

இப்பொழுது அந்த நிலைமை இல்லை. வியாபாரிகள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும்;. ஏறாவூர் நகருக்குச் சென்றால் தமக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் மிகவும் விலை மலிவாக வாங்கலாம் என்று நுகர்வோர் மனம் விரும்புமளவிற்கு மீண்டும் ஏறாவூரின் வர்த்தகத்திற்கு உயிர்ப்பூட்டவேண்டிய பொறுப்பு ஏறாவூர் வர்த்தகர்களுக்கு உண்டு. இதனை அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஸாபிறா வஸீம் நகர சபையின் பிரதித் தவிசாளர் உறுப்பினர்கள் பொதுச்சந்தை வியாபாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

.எச்.ஹுஸைன்

No comments: