News Just In

8/05/2021 10:04:00 PM

மட்டக்களப்பு மாநகர சபையில் 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்...!!


மட்டக்களப்பு மாநகரசபையின் மாதாந்த சபை அமர்வு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இன்றைய தினம்(05) காலை மாநகரசபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், சபையின் பதில் செயலாளராக மாநகர பிரதி ஆணையாளர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சபைக்குரிய சம்பிரதாயங்களுடன் இடம்பெற்ற இச்சபை அமர்வில் முதல்வரின் தலைமையுரையின் பின்னர் நிதிக் குழுவின் சிபாரிசுகள், முன்மொழிவுகள் சபை அனுமதிக்காக முதல்வரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் இதன்போது ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் மக்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளவுள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டிருந்தது.

அத்துடன் கடந்த ஆண்டுக்குரிய பாதீட்டில் முன்மொழியப்பட்டு நிறைவு பெறாத திட்டங்களை விரைவாக முடிப்பது தொடர்பிலும் வேலைக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

குறித்த அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் மாநகர சபையி உறுப்பினர் தவராசாவினால் முன்வைக்கப்பட்ட கண்டன தீர்மானம் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதுடன் சிறுமியின் உயிரிழப்புக்கான உண்மைக்காரணம் கண்டறியப்பட்டு நீதி கிடைக்க வழிவகை செய்யப்படவேண்டும் எனவும் கோரப்பட்டது .

அத்துடன் குறித்த அமர்வில் மட்டக்களப்பு மாநகர சபையினால் கொண்டுவரப்பட்ட 21 உபவிதிகள் தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடைபெற்றதற்கமைய மாநகர உறுப்பினர்களுடனான சிறப்பு கலந்துரையாடலின் மூலம் குறித்த உபவிதிகளை பரிந்துரை செய்வதா இல்லையா என்ற முடிவு எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

சபை அமர்வின் இறுதியில் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் அமரர் ராஜமகேந்திராவின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு சபை அமர்வானது நிறைவுக்கு வந்தது.


















No comments: