News Just In

7/15/2021 02:27:00 PM

மட்டக்களப்பு மாநகரசபையின் மாதாந்த அமர்வு- பழுதடைந்த மின்குமிழ்களை மாற்றியமைக்காக குறித்த பணியிலிருந்து பணியாளர்கள் இடைநிறுத்தப்பட்டமைக்கு கண்டனம்...!!


மட்டக்களப்பு மாநகரசபையின் மாதாந்த சபை அமர்வு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இன்றைய தினம்(15) காலை மாநகரசபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை பிரதி ஆணையாளர், சபையின் பதில் செயலாளராகச் செயற்படும் நிருவாக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சபைக்குரிய சம்பிரதாயங்களுடன் இடம்பெற்ற இச்சபை அமர்வில் முதல்வரின் தலைமையுரையின் பின்னர் நிதிக் குழுவின் சிபாரிசுகள், முன்மொழிவுகள் சபை அனுமதிக்காக முதல்வரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் இதன்போது ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் மக்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளவுள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டிருந்ததுடன், மேற்கொண்டுவரும் மற்றும் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் இதன்போது முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைப்பகுதியினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதுடன் மாநகர சபையின் உறுப்பினர்களை தகாத சொற்களால் அவமதிக்கும் விதமாக மாநகர ஆணையாளர் செயற்படுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், மாநகர சபை பிரதி முதல்வரின் 4ஆம் வட்டாரத்தில் பழுதடைந்த மின்குமிழ்களை மாற்றியதாக மாற்றிய ஊழியர்களை குறித்த பணியிலிருந்து இடைநிறுத்தி வேறு வேலையினை செய்யுமாறு பணித்ததாக மாநகர சபை ஆணையாளருக்கு எதிரான கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் குறித்த பணியினை மேற்கொண்டமைக்காக மாநகர சபையால் செலவு செய்யப்பட்ட நிதி தொடர்பான அறிக்கையினை தருமாறும் குறித்த செலவுக்கான நிதியினை தனது சொந்த நிதியில் இருந்து தருவதாகவும் ஆணையாளரால் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களை அவர்களின் பணிகளை தொடர அனுமதி வழங்குமாறும் பிரதி முதல்வரால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், வேலைப்பகுதியினர், நூலக பகுதியினர், சுகாதார பகுதியினரின் பணிகளுக்கும், கூட்டங்களுக்கு மாநகர சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களை அனுமதிக்காது குறித்த பணிகளை மேற்கொள்ள ஆணையாளர் தடுத்து வருகின்றமை தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் மாநகர சபை முதல்வரால் விளக்கமளிக்கப்படும் போது மாநகர சபையால் மாநகர உறுப்பினர்களின் முன்மொழிவுகளால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை அமுல்படுத்துவதே மாநகர சபை உத்தியோகஸ்தர்களினதும், ஊழியர்களின் பணி எனவும் அதனை மீறி செயற்படும் போது அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.


















No comments: