News Just In

7/15/2021 03:43:00 PM

இணையவழி கற்பித்தல் செயற்பாட்டிலிருந்து விலகி நிற்கும் போராட்டம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பு...!!


அதிபர், ஆசிரியர்கள் தற்போது முன்னெடுத்துச் செல்லும் நிகழ்நிலை (online) கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்கும் போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் நடாத்தியது. 

இந்நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், மாகாண செயலாளர் சமிந்த ஜெயரத்ன மற்றும் இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் சுமித், இலங்கை பிரிவெனா ஆசிரியர் சேவை சங்கத்தின் பொருளாளர் விஜித வன்ஸ ஹிமி மற்றும் சங்கத்தின் செயல்பாட்டாளர் ராஜமாணிக்கம் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள முரண்பாடு, தொழிற்சங்க உரிமைகள், உட்பட இந்நாட்டின் மாணவர்களின் இலவசக் கல்வியை பாதுகாப்பதற்காகவும் போராடுகின்ற தொழிற்சங்க தலைவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் முயற்சியில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. முத்துராஜவெல சூழலை நாசம் செய்யும் செயற்பாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்திய இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜெயசிங்க கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதேபோல் இந்நாட்டின் இலவச கல்வியை குழி தோண்டி புதைத்து கல்வியை தனியார் மயப்படுத்தும் செயற்பாடான சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிராக ஜூலை 8ஆம் திகதி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இக் கைதானது அரசியல் யாப்பில் காணப்படும் "எதிர்ப்புகளைத் தெரிவிக்கும்" உரிமையை முற்றாக மீறும் செயல்பாடாகும்.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் உட்பட பலர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் வரும்போது போலீசாரால் பலவந்தமாக கடத்தப்பட்டு தனிமைப்படுத்தல் என்னும் போர்வையில் முல்லைத்தீவு விமானப்படை முகாமுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை மிகவும் மோசமான முறையில், நிந்திக்கும் வகையில் உதவாக்கரை எனக் கூறியுள்ளார் .

2020 மார்ச் 12ஆம் திகதி தொடக்கம் கோவிட்-19 நோய் பரவல் காரணமாக பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலைமையில் 1 வருடமும் 3 மாதங்களும் கடந்த நிலையில் தொலைக் கல்வி முறைகள் பல காணப்பட்ட போதும் கோவிட்-19 நிலைமைக்கு பாதிக்கப்பட்ட பாடசாலை கல்வியை கொண்டு செல்வதற்கு அரசாங்கத்தின் ஒரே தீர்வாக காணப்படுவது நிகழ்நிலை(online) கற்பித்தல் மாத்திரமே ஆகும்.

எனினும் கல்வி அமைச்சு, மற்றும் மாகாண கல்வி அதிகாரிகள் மூலம் நிகழ்நிலை கற்பித்தலுக்கு தேவையான கருவிகள் மற்றும் தரவு(Data) போன்ற எவ்வித வசதிகளும் ஆசிரியர்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படாத நிலையில் தற்போது நடைபெறுகின்ற நிகழ்நிலை கற்பித்தலுக்கு தேவையான செலவுகளை சுயமாக முன்வந்து ஏற்று செயலாற்றும் ஆசிரியர்கள் மீது இவ்வாறான மோசமான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். கடந்த தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அதிகமான அரசு ஊழியர்கள் தபால் வாக்களிப்பில் அவருக்கு ஆதரவினை வழங்கி இருந்தனர். இதில் அதிகமானோர் ஆசிரியர்கள் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்நிலைமையில் கல்வி அமைச்சு, மாகாண மற்றும் வலய கல்வி பணிமனைகள் மூலமாக ஆசிரியர்கள் சுயமாக மேற்கொள்ளும் நிகழ்நிலை கல்வி செயற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகின்றன. ஆசிரியர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் அவர்கள் சுயமாக முன்வந்து செய்யும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் இந் நாட்டின் கல்வி செயற்பாடுகளில் ஈடுபடும் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடானது 24 வருடங்கள் கடந்தும் இன்னும் தீர்க்கப்படாமல் தொடர்ந்து செல்கின்ற நிலையே காணப்படுகின்றது. ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் தொடர்ச்சியாக இவ்விடயத்தில் எம்மை ஏமாற்றி வருகின்றது. இந்நாட்டின் அரசு ஊழியர்களின் குறைந்த சம்பளத்தை பெறுகின்றவர்களாக ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள். ஆசிரியர் சேவை தரம் இருப்பவரின் நாட் சம்பளம் ரூபா 1498 ஆகும். எனவே அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்கும் வரை எமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என குறிப்பிட்டார்.

மேலும் இவர் குறிப்பிடுகையில் 2015 ம் ஆண்டு பெருந்தோட்ட பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 3021 பேருக்கு ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டது. இந்த நியமனங்கள் பல கட்டங்களாக வழங்கப்பட்டதுடன், இவர்களுக்கான கொடுப்பனவாக முதலில் 6000 ரூபாவாகவும் பின்னர் 10,000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டது. வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்வதென்றால் ஆசிரியர் பயிற்சி அல்லது நியமன பாடத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 2005ஆம் ஆண்டு இவர்களுக்கு நியமனம் வழங்கிய நல்லாட்சி அரசாங்கம், ஒரே தடவையில் நியமனம் வழங்காமலும் அவர்களுக்கான பயிற்சி அல்லது பட்டம் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் விட்டமையும் இவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.

கொரோனா நோய் பரவலால் ஒன்றரை வருட காலமாக இந்நாட்டின் கல்வி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் கல்வியை மீண்டும் கட்டியெழுப்ப சிரமத்திற்கு மத்தியில் அதிகளவு ஆசிரியர் பற்றாக்குறையால் பாதிப்படைந்து காணப்படும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் 10000 ரூபா எனும் மிக குறைந்த கொடுப்பனவிற்கு பல வருடங்களாக சேவையாற்றும் இவ் ஆசிரியர்களுக்கு அநீதி நிகழ்ந்துள்ளது. இவர்களுக்குரிய இறுதி பரீட்சையை அவர்களின் சொந்த மாவட்டங்களில் நடாத்துவதற்கு அல்லது இவர்களின் துயர நிலையை கருத்தில் கொண்டு ஆசிரியர் சேவை தரம் 3-1 க்கு உள்ளீர்ப்பு செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மிகப் பொறுப்புடன் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம் எனவும் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் குறிப்பிட்டார்.

No comments: