News Just In

7/28/2021 08:34:00 PM

அரசியல்வாதிகளா? ஊழல் பெருச்சாளிகளா? இவர்களிடமும், இவர்களின் “பினாமி”களிடமும் இருக்கும் சொத்துக்கள் எங்கிருந்து, எதன் வழியாக வந்தன?


இலங்கை முஸ்லிம் அரசியலின் பெயரால் நடந்த பகல் கொள்ளையில் , படிப்படியாக கரைந்து , இலங்கை முஸ்லிம் அரசியலின் ஜீவ உயிர் அழிந்தே போனது. சேர் ராசீக் பரீட், டி.பி.ஜாயா, டொக்டர் எம். சீ.எம் கலீல், பதியுதீன் மஃமூத், எம்.எச். முஹம்மட், ஏ.சி.எஸ் ஹமீத், ஏ.எச்.எம். பெளசி , எம்.எச்.எம் அஷ்ரப் ….போன்றவர்கள் பல வருடங்களாக அரசியலில் இருந்தும் திரட்டாத செல்வத்தை, கோடிஸ்வரர்களாவதற்கு கொள்ளை அடிக்காத போது, பின் வந்த இவர்களால் எப்படி இந்தளவு செல்வத்தையும் சொத்துக்களையும் திரட்ட முடிந்தது? என முஸ்லிம் இலக்கியவாதியும் சமூக செயற்பாற்றாளருமான பிரபல எழுத்தாளர் பௌசர் மஹ்ரூப் சமூக ஊடகம் வாயிலாக கேள்வியொன்றை முன்வைத்துள்ளார்.

அந்த பதிவில் மேலும், புறநடையாக சேர் ராசீக் பரீட், டி.பி.ஜாயா, டொக்டர் எம். சீ.எம் கலீல் போன்றவர்கள் தமது பரம்பரை சொத்துக்களை நாட்டுக்கும், மக்களுக்கும் “இனாமாக” வழங்கினர் என்பதே வரலாறு. எவ்வளவு பெரிய தலைவர்கள் அவர்கள். ஆனால் பின் வந்த இந்த “தரகு “அரசியல்வாதிகளான ஊழல் பெருச்சாளிகளுக்கு ஆடம்பர மாளிகைகள், சர்வதேச , தேசிய ரீதியான முதலீடுகள், வீடுகள், காணிகள், வணிக ஸ்தாபனங்கள் எண்ணிலடங்கா

இப்படியான “பணம் பண்ணும் சூதாட்ட , நயவஞ்சக முஸ்லிம் அரசியலுக்கு “ வந்தால் , எம்.பீ…(பீ) யாகி , பின் சொந்த மக்களின் தலையில் மண்ணை வாரியாவது அமைச்சராகி , தேசத்தின் சொத்துக்களைச் சூறையாடி பல தலைமுறைக்கும் சொத்து சேர்க்கலாம் என்கிற “முன்மாதிரி” யைக் காட்டியது யார்? இதன் மூலம் முஸ்லிம் அரசியலை ஊழலின், ஏமாற்றுத்தனத்தின், அரசியல் மோசடியின் உறைவிடமாக மாற்றியது யார்?

முஸ்லிம்களின் அரசியல் நம்பத்தகுந்தது அல்ல என்கிற “ட்ரேட் மார்க்” , யாரின் அரசியல் பல்டிகளின் வழியாகவும் நடத்தை வழியாகவும் வந்தது? தலைவர்கள் எப்படி, எவ்வளவு கொள்ளை அடித்தால் நமக்கென்ன? “ வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் பொசியுமாம் அங்கங்கே” என்கிற ஒரு சுயநலன் சார்ந்த கூட்டத்தை உருவாக்கியது யார்?

முதல் முதலாக பாரளுமன்றம் வந்த கையுடன் , முழு மொத்த நாட்டு மக்களையும் , முழு முஸ்லிம் சமூகத்தையும் ஒடுக்கும் , பேரினவாத இன ஒடுக்குமுறை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் புது. பா. உக்களுக்கு யார் முன்மாதிரி? இந்த பெயர் தாங்கி முஸ்லிம் கட்சித் தலைவர்களால் , தம் கட்சி பா. உக்களை ஏன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாதுள்ளது?

இந்த பா. ஊகங்கள், ஆதரிக்க சொன்னால் ஏன் எதிர்க்கிறார்கள், எதிர்க்கச் சொன்னால் ஏன் ஆதரிக்கிறார்கள்? இன்றைய இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்களில், ஊழல் பெருச்சாளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது யார்? உண்மை சொன்னதற்காக , எதையும் எதிர் கொள்ளத் தயார்! யாராலும் வாய் திறந்துதானே ஆக வேண்டும்!

அப்படி இல்லை, இது அபாண்டம் என சொந்த முகத்துடன் வந்து சொல்ல முடியுமா?இந்த ஊழல் பணத்திற்காக, தம் “வயிற்றுக்கு மாரடிக்கும்” அன்றாடம் காய்ச்சிகள் பாவம். அவர்களுடன் பொருதும் நோக்கமில்லை, மலைகள் வந்தால் பார்க்கலாம். பட்டியலும் போடலாம். என்று தெரிவித்துள்ளார்.

No comments: