News Just In

7/28/2021 08:25:00 PM

மக்களின் உரிமை சார்ந்து நாம் கதைப்பதால் எம்மைப் பழிவாங்குகின்ற, மக்களிடமிருந்து முற்றாக வெளியேற்றக் கூடிய செயற்பாடுகளை அரசாங்கம் முழுமூச்சாகச் செய்கின்றது!!


இந்த நாட்டின் ஜனநாயகம், சிறுபான்மை சமூகங்களின் உரிமை சார்ந்த விடயங்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலாகக் குரல் கொடுப்பதன் காரணமாக எங்களைப் பழிவாங்குகின்ற அல்லது மக்கள் மத்தியில் இருந்து முற்றாக வெளியேற்றக் கூடிய செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முழுமூச்சாகச் செய்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக எமது தமிழ்ப் பிரதேசங்களில் இருக்கின்ற பல பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் சீரழிந்து தங்களிடம் இருக்கின்ற சொத்துகளை விற்றே அவர்களது கடன்களை முடிக்கும் சூழ்நிலையிலேயே காணப்படுகின்றன. ஆனால், ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பல வித்தியாசமான முறைமைகளைக் கையாண்டு, பல சிந்தனையாளர்களின் முயற்சியால் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

முன்பெல்லாம் இவ்வாறான சங்கங்களிலேதான் அரசியல் ஆக்கிரமிப்புகள் செறிந்திருந்தன. அவ்வாறான காலங்களையெல்லாம் கடந்து இந்த சங்கம் இவ்வாறு சிறப்பாக இயங்கி வருகின்றமை பாராட்டத்தக்கது. அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பிரதேச கூட்டுறவுச் சங்கங்களை எடுத்துப் பார்க்கின்ற போது ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச சங்கங்கள் மிகவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான சங்கங்கள் சமூகம் சார்ந்தும் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். யுத்தத்தால் பாதிப்புற்ற எமது சமூகத்தின் மக்களுக்கு ஏதோவொரு வகையில் நாள் வேதனம் வழங்கக் கூடிய விதத்திலான கைத்தொழில் பேட்டைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும். சமூகத்திலுள்ளவர்களுக்கும் தீர்வுகளை வழங்கக் கூடிய விதத்தில் பல முன்மொழிவுகளையும் கூட்டுறவுச் சங்கங்கள் தயாரிக்க வேண்டும்.

எமது அரசியல் ரீதியான செயற்பாடுகளைப் பார்க்கின்ற போது எங்களுக்கு வருடாந்தம் வழங்கக் கூடிய பாதீட்டு நிதியைத் தவிர அரசாங்கத்தினால் வேறு எந்த நிதி மூலங்களும் வழங்கக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

இந்த நாட்டின் ஜனநாயகம், சிறுபான்மை சமூகங்களின் உரிமை சார்ந்த விடயங்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலாகக் குரல் கொடுப்பதன் காரணமாக எங்களைப் பழிவாங்குகின்ற அல்லது மக்கள் மத்தியில் இருந்து முற்றாக வெளியேற்றக் கூடிய செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முழுமூச்சாகச் செய்து வருகின்றது. அந்த அடிப்படையில் நாங்கள் பல சவால்களுக்கு முகங்கொடுத்தே எமது மக்களுக்கான அரசியலைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எமது சமூகம் சார்ந்து நாங்கள் பல முன்மொழிவுகளை முன்வைத்திருந்தாலும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரையில் அரசோடு இணைந்து பயணத்த காலங்கள் மிக அரிதானவையாகும். உரிமை சார்ந்த விடயங்களை நாங்கள் பேசுவதால் அரசியலில் நாங்கள் ஆளுந்தரப்பாக இருக்கவில்லை. அந்த வகையில் எமது உரிமை சார்ந்து நாங்கள் போராடுவதன் காரணத்தால் எமக்கு சவால்மிக்க விடயங்கள் அதிகம் உண்டு.

ஆளுந்தரப்புடன் சென்ற பல அரசியல்வாதிகள் இன்று படுகின்ற அவஸ்தையை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த நாட்டில் சமாதானம், ஏனைய சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமத்துவம் பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றோம். அந்த அடிப்படையோடு எமது மக்களையும் அணிதிரட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.







No comments: