News Just In

7/11/2021 01:48:00 PM

ஜனநாயக ரீதியிலான வன்முறையற்ற போராட்டங்களை ஏற்றுக்கொள்ளாத தற்போதைய அரசு- இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்...!!


தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இல்லாத காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடாத்தியது.

ஆனால் தற்போது அரசிற்கு எதிரான ஜனநாயக ரீதியிலான வன்முறையற்ற போராட்டங்களை ஏற்றுக்கொள்ளாமை அல்லது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றமை ஜனநாயக நாடு என்பதனை கேள்விக்குறியாக்கியுள்ளது.

நாட்டு மக்களினதும் கல்விக்கொள்கைகளினதும் எதிர்கால நலன்களை கருத்தில் கொள்ளாது தான்றோறித்தனமாக சில முடிவுகளை எடுத்து அதனை நடைமுறைப்படுத்த நினைப்பது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

கல்வியில் விகிதாசார முறை கொண்டுவந்ததனால் நாட்டில் ஏற்பட்ட அழிவுகள் பல வருடகாலங்கள் நீண்டதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அத்தகைய முறை ஒரு இனரீதியிலான செயற்பாடு என்பதனை அனைவரும் அறிந்திருந்தும் அதனை உணர்ந்தவர்களாக நடக்கவில்லை.

தற்போது ஏற்படுத்தப்படவுள்ள சட்டமூலங்கள் ஒட்டுமொத்த நாட்டின் கல்விக்கொள்கைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனை ஒரு சமூகமன்றி பல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்காகவே ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனை ஒரு சமூகம் சார்ந்த தரப்பினர் நடாத்தியிருந்தால் அவர்கள்மீது வேறுவிதமான சட்டங்கள் பாய்ந்திருக்கும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை.

மக்களினதும் சமூகங்களினதும் கருத்துக்களுக்கு எந்தவித மதிப்பும் அளிக்காத அரசாங்கமே இப்போது ஆட்சியில் இருப்பது வெளிச்சமாகியுள்ளது.

இந்நிலையில் எந்தப்போராட்டங்களும் அடக்கப்படும் என்பதற்கு அப்பால் ஆட்களுக்கு ஏற்ப சட்டங்கள் பயன்படுத்தப்படும் என்பதில் மறு கருத்து இல்லை.

மாணவர்கள் இழந்துபோன கல்வியை மீட்டெடுக்க அதிபர்கள், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செய்கின்ற பணிகளைக்கூட இந்த அரசு மதிப்பதாக இல்லை.

அரசு அராஜகமாக நடந்துகொள்கிறது என்பதற்காக புனிதமான ஆசிரியத்தொழிலில் இருக்கும் எம்மையும் அவ்வாறு நடந்துகொள்ள தூண்டுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதற்கு அப்பால் எதிர்கால சந்ததியின் வாழ்வை சீரழிக்கும் நடவடிக்கைகளுக்கு எம்மைத் தள்ளக்கூடாது.

எமது சந்ததி பல இடர்களையும் இழப்புக்களையும் சந்தித்து இன்னுமே மீளமுடியாமல் இருப்பது எல்லோரும் அறிந்த விடயம்.

ஆகையால் சமூக செயற்பாட்டாளர்களை அடக்குகின்றோம் எனக் கூறிக்கொண்டு இந்த அரசாங்கம் தன்தலைமேல் மண்ணை வாரிக்கொட்டிக்கொள்வதை அண்மைய செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

ஆகையால் அரசாங்கம் ஜனநாயக வழிமுறைகளுக்கு மதிப்பளிப்பதோடு அனைத்துச் சமூகமும் ஏற்கக்கூடிய வகையில் தீர்மானங்களை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். இல்லையேல் ஒரு சாராரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களாலும் முன்னெடுக்கப்படும்.

என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: