News Just In

7/11/2021 02:14:00 PM

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட வேண்டாம்- இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் அன்புடன் கோரிக்கை விடுப்பதாக சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் சரியாக 65 லட்சம் வாக்குகளை பெற வேண்டும். எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 69 லட்சம் வாக்குகளை பெற்றார். அப்படியானால் 4 லட்சம் வாக்குகளே வித்தியாசம்.

ஒரு வகையில் செய்த இந்த உதவிக்கு மதிப்பளிக்க வேண்டாமா?. இந்த கௌரவம் இல்லாது தலைக்கணம் கொண்ட திலும் அமுனுகமவுக்கு நாங்கள் முன்வைக்கும் இந்த புள்ளிவிபரங்களை ஆராய்ந்தால் புரியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்டி மாவட்டத்தில் ஆதரவு வழங்கி இருக்காவிட்டால், சுமார் 50 ஆயிரம் வாக்குகளால் கண்டி மாவட்டத்தில் தோல்வி ஏற்பட்டிருக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்துக்கொண்டதன் காரணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலதிமாக 4 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதனை மறப்பவர்களை நன்றி மறந்தவர்கள் என்றே கூறுவார்கள். இந்த நன்றி மறந்த நிலைமையே திலும் அமுனுகமவுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒற்றுமையை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டுமாயின் இப்படியான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என அன்புடன், தயவுடன் திலும் அமுனுகமவிடம் கோருகின்றேன். இப்படியான கருத்துக்களால் எமது கட்சியினரின் மனம் புண்பட்டுள்ளது. அவர்கள் மனமுடைந்து போயுள்ளனர்.


இவ்வாறான கருத்துக்களால் அன்பும், கௌரவமும் அழிந்து போகும் நிலை ஏற்படும். பொதுஜன பெரமுன ஆட்சி அதிகாரத்தை கொண்டுள்ளது. அதேபோல் அரசியலும் செய்கிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் அரசாங்கம் இல்லை.அரசியலும் இல்லை. எனது வாயை மூடி இதனை நிறுத்த முடியாது. அது கஷ்டம். அனைத்து உடன்படிக்கைகளிலும் நானே கையெழுத்திட்டேன் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments: