News Just In

7/08/2021 07:21:00 AM

நமது நாட்டின் மரபுரிமையை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம்- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு...!!


நமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று(07) அலரி மாளிகையில் இடம்பெற்ற 131ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இத்தேசிய நிகழ்வில் சோமாவதிய மற்றும் ரிதி விகாரை ஆகியன தொல்பொருள் ஆராய்ச்சி மையமாக பெயரிடப்பட்டமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதி அவர்களினால் சோமாவதிய ரஜ மஹா விகாராதிபதி பஹமுனே ஸ்ரீ சுமங்கள தேரர் மற்றும் ரிதி விகாரையின் விகாராதிபதி திப்படுவாவே புத்தரக்கித தேரர் ஆகியோருக்கு அதற்கான சன்னஸ பத்திரம் வழங்கப்பட்டது.

இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் www.archaeology.gov.lk புதிய இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க ஆகியோர் இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் புதிய 14 நூல்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

நான்கு தலைமுறைகளாக தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆற்றிய சேவைக்காக, சீகிரிய தல்கொடே அளுத்கெதர தலைமுறையினருக்கு பிரதமரினால் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் புதிய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு, புதுகல தொல்பொருள் தளத்திலிருந்து இரு களிமண் பலகைகளை கண்டுபிடித்த திரு.நிமல் கருணாதிலக மற்றும் இதுவரை அறியப்படாத பண்டைய குகை ஓவியங்களை கண்டுபிடித்த திரு.ஓ.ஆர்.ஜயதிலக அவர்கள் மற்றும் திருமதி.தனூஜா தர்ஷனி அமரதுங்க ஆகியோருக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், திருமதி.தர்ஷனி அமரதுங்க அவர்களினால் இரு ஓவியங்களும் வழங்கப்பட்டன.

சோமாவதிய ரஜமஹா விகாராதிபதி பஹமுனே சுமங்கள தேரர் மற்றும் ரிதி விகாரையின் விகாராதிபதி திப்படுவாவே புத்தரக்கித தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினரும் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

131ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
எங்கள் தேசத்தைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். அந்த பண்டைய மரபுரிமை பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். அந்த மரபுரிமையை இன்றுவரை பாதுகாக்க முடிந்தமையாலேயே உலகத்தின் பார்வையில் நாம் ஒரு பெருமைமிக்க தேசமாக உயர முடிந்தது என்று நான் நம்புகிறேன்.

எமது நாட்டின் அந்த பண்டைய மரபுரிமையை வெளிக்கொணர்ந்து அவற்றை பாதுகாப்பது தொல்பொருள் திணைக்களமாகும். அவர்கள் அதற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மேற்கொள்கின்றனர். அந்த மரபுரிமைகளை பாதுகாப்பதுடன் அது தொடர்பில் மக்களுக்கும் தெளிவுபடுத்துகின்றனர்.
1890 ஆம் ஆண்டு இது போன்றதொரு நாளிலேயே இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 131 ஆண்டுகளாகின்றன.

இந்த நீண்ட காலப்பகுதியில் தொல்பொருள் திணைக்களம் ஆற்றிய பணிகளை வார்த்தைகளால் கூறி முடிக்க முடியாது. எனினும் அது நாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட உன்னத பணி என்பதை நான் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டும்.

அன்று பெல் அவர்கள் பண்டைய மரபுரிமைகளை வெளிப்படுத்த அனுராதபுரத்தில் முதல் அகழ்வை மேற்கொண்டு ஆரம்பித்து வைத்த தொல்பொருள் அகழ்வு இன்றுவரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நீங்கள் அனுராதபுரம், பொலனறுவைக்கு செல்லும்போது இது சார்ந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த இடங்களுக்குச் செல்லும்போது, உலகில் வேறு எந்த தேசத்திற்கும் இல்லாத பெருமை நமக்கு இருப்பதாக இயல்பாகவே உணர்கிறோம். அதனை உணர்ந்த எவருக்கும் இந்த நாட்டின் மீதான அன்பு குறையாது என்பது எமக்கு தெரியும்.

தம்பதெனிய, யாபஹுவ போன்ற இடங்களுக்கு சென்றாலும் இதே நிலைதான். இத்திணைக்களத்தினால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட சேவையினாலேயே இந்த அனைத்து இடங்களும் நாம் காணும் அளவிற்கு பாதுகாப்பாக உள்ளது.
அவர்கள் கடந்த காலத்தை ஆராய்ந்து தற்போது அந்த மரபுரிமையை கண்டுபிடிப்பது மாத்தரமன்றி, எதிர்காலத்திற்காக அந்த மரபுரிமையை பாதுகாப்பதற்கும் பாரிய பங்களிப்பு செய்கின்றனர்.

இது முழு உலகமும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தருணம் என்பதை நாம் அறிவோம். அந்த சவாலை வெற்றிக்கொள்வதற்கு ஒரு தேசமாக நாம் போராடி வருகின்றோம். நாட்டிற்கு எத்தகைய சவால்கள் ஏற்படினும் அதனை எதிர்கொள்வதற்கு எமது முன்னோர்கள் விட்டுச்சென்ற மரபுரிமைகள் எமக்கு ஒரு பலமாக இருக்கும்.

இன்று இவ்வாறானதொரு தொற்று நிலை இல்லாதிருப்பின் ஆண்டுக்கு இலட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் எமது நாட்டின் அழகையும், பண்டைய மரபுரிமைகளையும் பார்வையிட இலங்கைக்கு வந்திருப்பார்கள்.
சீகரியா மற்றும் தம்புள்ளைக்கு அதில் மிகச் சிறப்பான மதிப்புள்ளது. அன்று பெல் அவர்கள் காடுகளினால் சூழப்பட்டிருந்த சீகரியாவை கண்டுபிடித்து அதன் தொல்பொருள் மதிப்பை ஆராய ஆரம்பித்தார். செனரத் பரணவிதான அவர்கள் சீகிரியாவை பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி சீகிரியா பற்றி கவிதை புனைவதற்காக ஆயிரம் தடவைகள் சீகிரியாவில் ஏறியுள்ளதாக நாம் கேள்விபட்டுள்ளோம்.

தொல்பொருள் துறையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கப்பட்ட சீகிரியாவின் அகழ்வாராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை. இன்று சீகிரியா ஒரு உலக பாரம்பரிய தளம் மட்டுமல்ல, உலகின் அதிசயமும் கூட. இது அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் காரணமாகும்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் கூட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தமது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர. அவர்கள் ஒருபோதும் தமது பணியை கைவிடவில்லை. நாட்டை காப்பது போன்றே அவர்கள் பணியாற்றுகின்றனர் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்கள் குறிப்பிட்டார். எமது அமைச்சின் செயலாளர் தொடர்ந்து எம்மவர்களின் தேவை குறித்து அடிக்கடி நினைவுபடுத்துவார். அவற்றை நாம் நிறைவேற்றுவோம்.

அதனால் சிரமம் பாராது எதிர்கால சந்ததியினருக்காக தொல்பொருள் தளங்களை பாதுகாத்து, புதிய அறிவை உலகின் மத்தியில் முன்வைத்த அனைவருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.

பண்டைய கால மனிதன் தொடர்பில் அண்மைய வெளிப்பாடு வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உட்பட முழு உலகின் கவனத்தையும் ஈர்த்ததை நாங்கள் கண்டோம்.

கிழக்கு மாகாணம் என்பது பல தொல்பொருள் தளங்களை கொண்ட இடமாகும். சேருவில, முஹுது மஹா விகாரை, கிரிகடுசேய, லங்காபடுன, கோணேஸ்வரம் போன்ற வரலாற்று இடங்கள் பல அங்குள்ளன.
ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அந்த இடங்கள் நீண்ட காலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. சில சமயங்களில், நாட்டை ஆட்சி செய்தவர்கள் கூட அவை அழிக்கப்படும் வரை காத்திருந்தனர். தொல்பொருள் தளங்களை என்ன செய்வது என்று அவர்கள் கேட்ட ஒரு காலம் இருந்தது. நினைவுச்சின்னங்கள் கொன்கிரீட் இடப்பட்டு மூடப்பட்டிருந்தன. அவை குறித்து புதிதாக கூற வேண்டியதில்லை.

ஆனால் மக்கள் இவற்றை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
இவை எமது நாட்டின் மரபுரிமை. அவற்றை அழிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. இடமளிக்கவும் மாட்டோம்.

எமது ஜனாதிபதி அவர்கள் தொல்பொருள் தளங்களை பாதுகாக்க இரவு பகலாக பாடுபடும் தலைவராவார். அவர் அவ்விடங்களுக்கு சென்று அவ்விடங்கள் அழிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதற்காக ஜனாதிபதி செயலணியொன்றையும் நிறுவியுள்ளார். அதற்கமையவே முஹுது மஹா விகாரை போன்று பாதுகாக்கப்பட வேண்டிய தளங்கள் இந்தளவிற்கேனும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த வரலாற்று இடங்கள் தேசிய மரபுரிமையாகும். ஒரு இனத்திற்கும் ஒரு மதத்திற்கும் உரித்தானவை அல்ல. இந்நாட்டின் உரிமையாகும்.

எனவே இவ்விடங்களை பாதுகாக்கும்போது இனம், மதம் என பேதங்களை ஏற்படுத்திக் கொள்ள கூடாது. தொல்பொருள் தளங்களை எவரேனும் அழிக்க முற்பட்டால் அவர்களுக்கு எதிராக தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அந்த தண்டனை போதுமானது அல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் அச்சட்டங்களை திருத்துவதற்கு எமக்கு முடியும்.

யுனெஸ்கோவினால் பெயரிடப்பட்ட 890 உலக பாரம்பரியங்களில் 7 எமது நாட்டின் மரபுரிமைகளாகும். சீகிரியா, அனுராதபுரம், பொலனறுவை, கண்டி, தம்புள்ளை, காலி கோட்டை ஆகிய ஆறு தொல்பொருள் தளங்களும் அதில் உள்ளடங்கும். சிங்கராஜவே ஏழாவதாகும்.

இந்த மரபுரிமையை பாதுகாப்பவர்கள் அனைவரும் நம் தாய்நாட்டின் பெருமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கின்றனர். அவர்கள் போருக்குச் சென்ற போர்வீரர்களைப் போலவே, எதிர்கால சந்ததியினருக்காக நமது பாரம்பரியத்தை பாதுகாக்க முயல்கின்றனர்.

இன்று, தொல்பொருளியல் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் அடிப்படையில் மனித ரீதியாக வளர்ந்த அறிவியல் பாடமாக மாறியுள்ளது. எனவே, கடந்த காலத்திலிருந்து பெறப்பட்ட அறிவை நிகழ்காலத்திற்காக பயன்படுத்துவது அவசியம்.

இறுதியாக, இலங்கையின் மரபுரிமை தொடர்பான புரிந்துணர்வுள்ள எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது. எனவே நீங்கள் அனைவரும் ஒன்றாகச் செய்து வரும் சிறந்த பணிகளுக்கு ஒரு அரசாங்கமாக நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றேன். என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பிரதமரின் செயலாளர் திரு காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் K.A.D.R.நிசாந்தி உள்ளிட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments: