News Just In

7/29/2021 08:34:00 AM

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமை பேண்தகு விவசாய அபிவிருத்தி தொடர்பான திருகோணமலை மாவட்ட கலந்துரையாடல்!!


(எப்.முபாரக்)
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமை பேண்தகு விவசாய அபிவிருத்தி தொடர்பான திருகோணமலை மாவட்ட கலந்துரையாடல் நேற்று (28) மாவட்ட செயலகத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடைபெற்றது.

அடுத்து பெரும் போகத்திற்கு தேவையான சேதனப் பசளைகள் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்கி வைக்கப்படும் என்றும் இது தொடர்பில் விவசாயிகள் பீதி அடைய வேண்டிய அவசியம் கிடையாது என்று இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

இரசாயன வளமாக்கி இறக்குமதிக்காக பாரிய நிதி வெளிநாடுகளுக்கு வருடாந்தம் செல்லுகின்றது. இதன் மூலம் நாடு பாரிய பின்னடைவை நோக்குகின்றது. எனவே இந்நிலைமையை மாற்றி அமைத்து எமது நாட்டுக்கு தேவையான சேதனப்பசளைகளை நாட்டிலேயே உற்பத்தி செய்து அதனை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் சுற்றாடல் நேயமிக்க விவசாய செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். இன்று நாட்டில் அதிகமான பிரதேசங்களில் இரசாயன வளமாக்கி பாவனை காரணமாக மக்கள் சிறுநீரக நோய் உட்பட பல்வேறு வகையான நோய்களுக்கு உட்பட்டு சிரமப்படுகின்றனர்.

எனவே எதிர்கால பரம்பரையினரையாவது சிறுநீரக நோய் உட்பட பல்வேறு வகையான நோய்களில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்கில் சேதன முறையிலான விவசாயம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சேதன முறையைப் பயன்படுத்தி பயிர் செய்கை மேற்கொள்கின்ற சந்தர்ப்பத்தில் ஹெக்டயர் ஒன்றிற்கு 12 ஆயிரத்து 500 ரூபா அரசாங்கத்தினால் சேதன பசளை உற்பத்திக்கு மானியமாக வழங்கப்பட உள்ளது.

சேதனப் பசளையை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளுகின்ற சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு உற்பத்தி அல்லது வருமான இழப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதனையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. தூரநோக்கு அடிப்படையில் ஜனாதிபதியால் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.அதனையே நாம் செயற்படுத்துகின்றோம்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கமநல அபிவிருத்தித் திணைக்கள அலுவலகங்கள் விரைவில் புனர்நிர்மாணம் செய்யப்படும். எதிர்வரும் காலங்களில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு தேவையான இயந்திர சாதனங்களை வழங்கவுள்ளோம்.இச்செயற்பாடு விவசாயிகளுக்கு சாதகமானதாக அமையும்.

அத்துடன் இன்னும் இரண்டு மாதங்களில் விவசாயம் தொடர்பான தேசிய கொள்கை வெளியிடப்பட உள்ளது. அத்துடன் விவசாயம் தொடர்பான தகவல்கள் ஒன்றுசேர்க்கப்பட்ட ஒரு தகவல் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இதனல மூலமாக நாட்டினுடைய எந்த ஒரு பிரதேசத்தில் இருக்கக்கூடிய விவசாயியும் தங்களுடைய பிரதேசத்திற்கு காலத்துக்கு ஏற்றாற்போல் என்ன வகையான பயிர்களை மேற்கொள்ள முடியும் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெறக்கூடிய வகையில் அந்த கட்டமைப்பு ஏதுவாக அமையும்.

திருகோணமலை மாவட்டத்தில் விவசாய துறையுடன் தொடர்புடைய வெற்றிடங்களை விரைவில் நிரப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இதன்போது முன்னுரிமை வழங்கும் செயற்பாடு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் தூர்ந்து போயுள்ள குளங்களை புனர்நிர்மாணம் செய்தல் மற்றும் வடிகால் அமைப்புகள் புனர்நிர்மாணம் செய்தல் உட்பட பல்வேறு வகையான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் இதன்போது அமைச்சரிடம் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்ததுடன் குறிப்பாக குறித்த பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்கி அவசியமான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளை அமைச்சர் இதன்போது அறிவுறுத்தியமை விசேட அம்சமாகும்.

திருகோணமலை மாவட்டம் பல்வேறு வகையான இயற்கை வளங்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுகின்றது. தற்போதைய அரசாங்கம் மக்களுடைய சாதகமான பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய முற்படும். எனவே போலியான பிரசாரங்களை நம்பி விவசாயிகள் அதற்குள் அகப்படவேண்டாம். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டு மக்களுடைய நலன் கருதி ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அனைவரும் இந்த செயல் திட்டத்திற்கு தங்களுடைய ஒத்துழைப்புகளை வழங்குமாறும் இதன்போது அமைச்சர் வேண்டிக்கொண்டார்.

திருகோணமலை மாவட்ட விவசாய அபிவிருத்திக்கு இவ்வருடம் அரசாங்கத்தினால் 500 மில்லியனுக்கு மேற்பட்ட ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பாலிய விவசாய அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விவசாயிகளுடைய செயற்பாடுகளை பலப்படுத்தி தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமான செயற்பாடுகள் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எமது நாட்டுக்கு தேவையான சேதனப் பசளைகளை உற்பத்தி செய்து எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து நிலப்பகுதிகளிலும் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வெளிநாட்டுச் செலாவணி அதிகரிப்பது இதனுடைய மூல நோக்கமாகும். மக்களை ஆரோக்கியமான சமூகமாக மாற்றி அமைக்கின்ற ஒரு செயற்பாடாக இந்தத் திட்டம் அமையும் என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட சில விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள், மரமுந்திரிகை மற்றும் மாமர கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோரல, பிரதேச அரசியல் தலைமைகள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பீ வணிகசிங்க, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, அமைச்சின் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், சக உத்தியோகத்தர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.No comments: