News Just In

6/24/2021 09:47:00 AM

அரசியற் கைதிகள் தொடர்பில் நாமலின் கருத்து காலம் கடந்த ஞானமாக இருந்தாலும் அதனை வரவேற்கின்றோம்- பா.உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா!!


பயங்கரைவாதத் தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்யாமல் அதனை முழுமையாக இல்லாமல் செய்தால் தான் இந்த நாடு சுபீட்சம் அடையும். அரசியற் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கருத்து காலம் கடந்த ஞானம் என்றாலும் நாங்கள் அதனை வரவேற்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையிலே மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் தொற்றினை ஒழிப்பதற்காக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். உண்மையில் இந்த கொவிட் தொற்றினை ஒழிப்பதற்காக இரவு பகலாகப் பாடுபடும் வைத்தியத்துறை. சுகாதாரத்துறை போன்றோரை நாங்கள் பாராட்ட வேண்டும். உள்ளுராட்சி அமைப்புகளும் இதில் பங்கு கொள்கின்றார்கள். அவர்களுக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். இவர்களுக்கான அனைத்து வசதிகளும் பூரணமாகக் கிடைப்பதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.

சுகாதாரத்துறையினர், தாதியர்கள் போன்றோர் தங்களுக்குத் தேவையான வசதிகள் கிடைக்கவில்லை என கடந்த சில வாரங்களாக, நாட்களாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் அரசு அவர்களை நல்ல முறையில் கவனிக்க வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கவனத்திற் கொண்டு செற்படுத்த வேண்டும்.

இருப்பினும் வைத்தியத்துறையையும், சுகாதாரத்துறையையும் சுயமாக இயங்க விடாமல் இராணுவத்தினர் கொவிட் செயலணியில் உள்வாங்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். இதனை சுகாதாரத் துiயினரும் உணர்ந்துள்ளார்கள். அவர்கள் நியாயமான முறையில் தங்கள் சேவைகளைச் செய்வதற்கு முடியாமல் இருக்கின்றார்கள்.

இன்று பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் தனது 44 வருட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் அனுபவத்தைக் கொண்டு நல்ல பல கருத்துக்களை வெளியிட்டார். மக்கள் ஆணை தந்துள்ள ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அத்துடன் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை அதற்குக் கீழே பல துறைகளிலும் செயலாளர்கள், பணிப்பாளர்கள், துறைசார் நிபுனர்கள் எனப் பலரும் இருக்கும் போது சுகாதாரத்துறையினர் அவை சார்ந்த நிபுனர்கள் இந்தக் கொவிட் தொற்று தொடர்பில் பாடுபம் போது இராணுவத்தின் தலையீடு அதில் இருப்பதை அவர் கண்டித்திருந்தார். உண்மையில் அது வரவேற்கத்தக்கது.

இந்தக் கொவிட் தொற்றினால் மக்கள் பலவிதத்திலும் கஷ்டத்திற்குள்ளாகியிருக்கின்றார்கள். அவர்களது தோள்களிலே சுமக்க முடியாத சுதைகள் இன்று சுமத்தப்பட்டிருகக்கின்றது. இன்று கொவிட் தொற்றினால் தங்களது அன்றாடத் தொழில்களை இழந்து நிற்கும் கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், மின்பிடித் தொழிலாளிகள் தங்களது தொழில்களை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது இந்த அரசு என்ன செய்கின்றது. எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள், விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றார்கள். ஆட்டோ சாரதிகள் கூட மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் என்ன நடக்கின்றது. அடிப்படை வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் மேலும் மேலும் துன்பங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக் கொவிட் தொற்றினால் பெரிய முதலாளிமார் தங்களுக்கான வரிச் சலுகைகளைப் பெற்று தங்களின் வியாபாரத்தை கொண்டு நடத்துகின்றார்கள். சிறு முதலாளிமார் பெற்ற வங்கிக் கடன்களைக் கூட கட்ட முடியாமல் திண்டாடுகின்றார்கள். அதற்கும் மேலாக கூலித் தொழிலாளிகள் பசியினால் வாடுகின்றார்கள். பெரிய முதலாளிமார் தங்கள் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்தும் போது அடிமட்ட மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒரு நிலையே இங்கு உருவாகியுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக இன்று எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இந்த நாட்டிற்கு வந்து எமது கடற்பரப்பை அழித்ததன் ஊடாக பல கஸ்டத்தின் மத்தியில் கடற்தொழிலாளர்கள் வாழ்வது மாத்திரமல்லாமல் கடல் உணவை உண்பதற்குக் கூட இந்த நாட்டில் மக்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டின் பல பாகங்களிலும் கடலாமைகள், டொல்பின்கள், திமிங்கலங்கள் போன்றன கரையொதுங்குகின்றன. சம்மந்தப்பட்ட பகுப்பாய்வு நிறுவகனங்களும், அரசும் அந்த உயிரினங்கள் இறப்பதற்கான காரணத்தினைக் கூறுகின்றார்கள் இல்லை. அதனை அரசு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன், நேற்றைய சபை அமர்விலே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்வது, நீண்டகாலம் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் எமது உறவுகளான அரசியற் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான அறிக்கையினை விட்டிருந்தார். இது மிகவும் சந்தோசமான விடயம். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.

இந்த விடயத்தை நீங்கள் எப்போதோ செய்திருக்க வேண்டும். 2009களிலே பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை புனர்வாழ்வளித்ததாகவும், அவர்களில் சுமார் மூவாயிரத்து ஐநூறு பேருக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுக் கொடுத்ததாகவும் கூறும் நீங்கள் ஒரு சில நூற்றுக் கணக்கான போராளிகளை முப்பது நாற்பது ஆண்டுகளாக சிறையில் வைத்திருந்ததைப் பற்றி ஏற்கனவே சிந்தித்திருக்க வேண்டும்.

இன்று ஜி.எஸ்.பி வரிச்சலுகை, அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் அறிக்கை என்பன போன்ற சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக இவற்றை நீங்கள் கையில் எடுக்கின்றீர்கள். இருந்தாலும் காலம் கடந்த ஞானம் என்பது போல நாங்கள் அதனை வரவேற்கின்றோம்.

நீண்ட காலமாகச் சிறையில் இருந்தவர்கள் மாத்திரமல்லாமல் கடந்த காலங்களிலே முகநூல்கள் போன்ற சமூக வளைதளங்கள் ஊடக தகவல்களைப் பதிவு செய்தார்கள் என்பதற்காகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அகை;கப்பட்டவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீங்கள் மீள்பரிசீலனை செய்யாமல் அதனை முழுமையாக இல்லாமல் செய்தால் தான் இந்த நாடு சுபீட்சம் அடையும்.

1978ம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்களினால் இந்தப் பயங்ககரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தினூடாக இந்த நாட்டிலே நடைபெற்ற போராட்டத்தினை உங்களால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்ததா? இல்லையே 2009ல் எத்தனையோ வெளிநாடுகள் உதவி செய்ததன் காரணமாகத் தான் இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தீர்கள். இன்று உங்களுக்குப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவிய அதே நாடுகளே இன்று பல திணிப்புகளை திணிக்கின்றன. அந்த வகையில் தான் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு நீங்கள் முற்படுகின்றீர்கள்.

மேலும், நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரைச் சுட்டுக் கொன்றிருக்கின்றார். தனக்கும் அதற்கு எவ்;வித சம்மந்தமும் இல்லை என்று அமைச்சர் கூறியிருந்தாலும் ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனவே இராஜாங்க அமைச்சரும், இந்த அரசாங்கமும் அந்த இறந்த இளைஞனுக்கு நியாயமான நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments: