News Just In

6/24/2021 08:16:00 AM

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது நியூசிலாந்து அணி...!!


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஆறாவது நாள் (ரிசர்வ் டே) ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில், இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் இரண்டாம் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதனை நியூசிலாந்து வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டியது. நியூசிக்கு வாய்ப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின், முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் திகதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. நான்காம் நாள் மழை பெய்ததால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 249 ரன்கள் பிறகு, நேற்று முன்தினம் (ஜூன்.22) நடந்த ஐந்தாவது நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கான்வே அதிகபட்சமாக 54 ரன்களும், வில்லியம்சன் 49 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி 4, இஷாந்த் 3, அஷ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம், இந்தியாவை விட அந்த அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ஷுப்மன் கில் 8 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையும் டிம் சவுதி எல்பிடபிள்யூ ஆக்கினார். நேற்று முன்தினம் 5வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று (ஜூன்.23) மாற்று நாளில் தொடங்கிய ஆட்டத்தில், கேப்டன் கோலி மிக விரைவாக 13 ரன்களில், ஜேமிசன் ஓவரில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். அதேபோல், புஜாராவும் 15 ரன்களில் ஜேமிசன் பந்தில் வெளியேறினார். பிறகு ரஹானேவை 15 ரன்களில் போல்ட் வெளியேற்ற, இந்தியா மதிய உணவிடைவெளிக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

இந்நிலையில், மதிய உணவுக்கு பிறகு ஜடேஜா, பண்ட், அஷ்வின் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், நியூசிலாந்துக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தேநீர் இடைவேளைக்கு பிறகு, அஷ்வின் ஓவரில் இறங்கி அடிக்க ஆசைப்பட்ட டாம் லாதம் 9 ரன்களில் அவுட்டானார். பிறகு, அஷ்வின் ஓவரில் டெவோன் கான்வே 19 ரன்களில் எல்பி ஆகி வெளியேறினார். எனினும், நியூசி., கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் நிலைத்து நின்று விளையாடினர். இந்த பார்ட்னர்ஷிப்பை கடைசி வரை இந்திய பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. இந்த ஜோடி 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 52 ரன்களும், ராஸ் டெய்லர் 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

முடிவில், நியூசிலாந்த்து அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது.

No comments: