News Just In

5/16/2021 07:04:00 AM

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை...!!


நாடு பூராகவும் அமுலில் உள்ள முழுமையான போக்குவரத்து கட்டுபாடு நீக்கப்பட்டதன் பின்னர், அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கேற்பவே செல்ல அனுமதி வழங்கப்படும். இந்த சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுபவர்களை கைது செய்வதுடன் , அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு போக்குவரத்து கட்டுப்பாடு நாளை திங்கட்கிழமை அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும். இதன்போது மக்கள் தங்களது தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு ஏற்பவே செல்ல முடியும்.

அதற்கமைய திகதி எண் ஒற்றை எண்ணாக இருந்தால் அடையாள அட்டையின் இறுதி இலக்கம் ஒன்றை எண்ணாக இருக்க வேண்டும்.

திகதி எண் இரட்டை எண்ணாக காணப்பட்டாள் , அடையாள அட்டையின் இறுதி இலக்கம் இரட்டை எண்ணாக காணப்பட வேண்டும்.

இந்நிலையில் இந்த சட்டவிதிகளுக்கு புறம்பாக எவரேனும் சென்றிருந்தால் , அவர்களை கைது செய்வதுடன் , அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

முழுமையான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களின் செயற்பாடு திருப்திகரமாக அமையப் பெற்றுள்ளது. தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாக்க முடியும்.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 9,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல்மாகாணத்திற்கு பிரவேசிக்க பயன்படுத்தப்படும் 14 எல்லைப்பகுதிகளில் பொலிஸ் சோதனைச் சாவடிகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதன்போது எல்லைப்பகுதியை கடக்க முற்பட்ட 1,967 வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் பயணித்த 3,634 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் பெருந்தொகையானவர்கள் அத்தியாவசிய சேவை நிமித்தமே இவ்வாறு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்ட சிலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதை கண்காணிப்பதற்காக பொலிஸ் சோதனைச்சாவடிகள் மட்டுமன்றி ,பொலிஸ் மோட்டர் சைக்கிள் பிரிவு, நடமாடும் சேவை பிரிவு என்பன கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன்போது பொலிஸார் சிவில் , சிருடையிலும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments: