News Just In

5/24/2021 07:27:00 AM

அக்கரைப்பற்று மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான கல்விப்பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வு!!


நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் புதிய அலகாக கல்விப்பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதற்கான தீவிர கள வேலைகள் மற்றும் கலந்துரையாடல்கள் கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்று சிறந்த திட்டமிடலுடன் மாணவர்களின் நலனை முழு நோக்காகக் கொண்டு கல்விப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர், வலயக்கல்வி அலுவலக விஞ்ஞான துறை பொறுப்பாளர், தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான துறை பீடாதிபதி, பாடசாலை அதிபர்கள், ஆசிரிய பிரதிநிதிகள், அக்கரைப்பற்று பட்டதாரிகள், பட்டப்பயிலுனர்கள், அண்மையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் மற்றும் தொழிநுட்ப வல்லுநர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று பிரதேச க.பொ.த உயர்தர சகல பிரிவு மாணவர்களுக்காகவும் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான வேலைத்திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீண்டகால பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டும் 2021 ஆண்டுக்கான மாணவர்களுக்கான உடனடியான உதவிகளை கருத்தில் கொண்டும் தம்மிடம் தயார் நிலையில் உள்ள வினாப்பத்திரங்களை கொண்டு மாணவர்களினது கல்வி நிலைப்பாட்டினை அறிதல்.

வினாப்பத்திரத்தினுடாக பெறப்பட்ட தகவல்களுக்கு இணங்க முடிக்கப்படாத அலகுகள் மற்றும் பெரும்பாலான மாணவர்களுக்கு தெளிவில்லாமல் உள்ள அலகுகளை எமதூர் வழங்களைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்து ஏற்கனவே உருவாக்கியுள்ள செயலியினுடாக பதிவிடப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது இதனால் மாணவர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தில் தேவையான, தெளிவில்லாத அலகுகளை தெளிவாக்கி அதில் பயிற்சி செய்து கொள்ள முடியும், மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாளுக்கு விடையளிக்க பயிற்சியளிப்பதானது பரீட்சை முடிவுகளை அதிகரிக்கச் செய்யும் மிகப் பிரதானமான காரணியாகும். பாடசாலைகளின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட பாடப்பரப்புகள் மாணவர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு அதில் பரீட்சை வைக்கப்பட்டு மதிப்பிடப்பட்டு மாணவர்களின் மதிப்பிடப்பட்ட விடைத்தாள், மதிப்பிட்டு முறை என்பன மாணவர்களுக்கு வழங்கப்படும். வினாத்தாளை செய்து காட்டும் விளக்கவுரை காணொளியாவும் செயலியில் இல் பதிவிடப்படும்.

முடக்கப்பட்ட காலத்தில் பாடசாலைகள் நடைபெறுவதில்லை என்பதால் அறிவிக்கும் இடத்தில் மாணவர்கள் வினாத்தாளை பெற்றுக்கொண்டு வீட்டிலிருந்தே செய்து பார்த்து விடைத்தாளை சமர்ப்பிப்பார்கள். மிகுதி வேலைகள் மேலே கூறப்பட்டது போல செயற்படுத்தப்படும், மாணவர்களின் புள்ளிகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு மேம்படுத்தல் உறுதி செய்யப்படும், நன்றாகக் கற்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவிக்கப்படும். திறமை சித்தி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்ய குறிப்பிட்ட எண்ணிக்கையான மாணவர்கள் இனங்காணப்பட்டு விஷேட கவனம் செலுத்தப்படுவர். என்றும் ஒவ்வொரு வருடமும் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் காலம் வரையில் பிரதான பணிப்படை (Working Force) ஆக செயற்பட்டு பல்கலைக்கழகத்தில் இணைந்தவுடன் எமது ஆலோசனை குழுவுடன் இணைந்து தொடர்ந்தும் பங்களிப்பு செய்வார்கள்.

இது பாடசாலை, தனியார் வகுப்புகளின் வழமையான போக்கில் இந்த செயற்றிட்டம் எந்த விதமான தாக்கத்தையோ ஆதிக்கத்தையோ ஏற்படுத்தாது என்றும் இது முழுக்க முழுக்க மாணவர்களின் தரப்பிலான குறைபாடுகளை நிவர்த்தித்தல் மற்றும் பயிற்றுவித்தல் ஆகிய செயற்பாடுகளையே மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: