News Just In

5/23/2021 07:39:00 AM

நமது கவனயீனமான செயற்பாடுகள் பாரிய ஆபத்தை உண்டாக்கும்- எச்சரிக்கிறார் டாக்டர் பறூசா நக்பர்!!


நூருல் ஹுதா உமர்
கோவிட் 19 மூன்றாம் அலை தொற்றுப்பரவலின் அதிகரிப்புக்கான தனி நபர் மனப்பாங்கு சார் காரணங்களாக கொத்தணிகளாக இனம் காணப்படும் இடங்கள், பொது நிகழ்வுகள், களியாட்டங்கள், சந்தைகள், அலுவலகங்கள் போன்றவற்றில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில் மக்களினால் காட்டப்படும் அக்கறையீனமே பாரிய செல்வாக்கு செலுத்துகிறது. சில சமயங்களில் ஆடை கலாச்சாரம் மாற்றுவதில் காட்டும் அக்கறைகூட கை கழுவுதலில் மக்கள் காட்டப்படுவது இல்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் சுகாதார துறையினருக்கு மக்களின் ஒத்துழைப்புக்கள் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கை கழுவுதலானது கிருமி அழிப்பான் (sanitizer) பாவனையை விட வினைத்திறன் வாய்ந்தது, சிக்கனமானது பக்கவிளைவில்லாதது, நேர தாமதத்தை ஈடு செய்வதற்காக அவசர அவசரமாக ஓடிச்சென்று கைவிரல் பதிவு மேற்கொண்ட பின்னர் ஆறுதலாக கை கழுவுதல் / வீட்டில் நான் சுத்தம் தான் என சொல்லி கையை கழுவாமல் விட்டுவிடல் போன்றன ஆபத்தான விளைவுகளை உருவாக்க கூடியது. எனக்கு முகக்கவசம் அணிந்தால் மூச்சு முட்டுகிறது, நான் தனியாகவே தான் இருக்கிறேன் என முகக்கவசம் அணியாது விடல்,அல்லது எனக்கு தெரிந்தவர்களுடன் இருக்கும் போது முகக்கவசம் தேவையில்லை என எண்ணுதல் பொருத்தமற்ற செயலாகும்.

அனைவரும் பொதுவான உணவு, பனங்களுக்கான பாத்திரங்களை பாவித்தல், நாம் பாவிக்கும் சூழலை சுத்தம் செய்வதில் பராமரிப்பதில் காட்டும் அசண்டையீனம், வெளியே சென்று உள்ளே வரும் நபர்கள் மற்றும் பொருட்கள் உள்ளே கொண்டு செல்லமுன் சரியான முறையில் துப்பரவு செய்யாமை, வெளியில் இருந்து வரும் விருந்தினர், அலுவலர்கள் தங்கள் தேவைகளை முடித்து செல்வதற்கான தனியான இடங்கள் ஒதுக்கப்படாது எல்லா இடங்களிலும் நடமாடும் சூழலை ஏற்படுத்துதல், தம்முடன் பழகிய ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்திருந்தும் அதனை கருத்தில் கொள்ளாது சுதந்திரமாக உலாவித்திரிதல். ஆகக்குறைந்தது தன்னை பிறரிடம் இருந்து தனிமைப்படுத்தக்கூட எண்ணாமை. இவை தான் இங்கு எமது சூழலில் தாக்கம் செலுத்தும் காரணிகளாக இருக்கின்றன.

எனினும் இதுவரை எம்மை தாக்கிய தொற்று ஓரளவு வீரியம் குறைந்துள்ளமை எம்மை ஒரளவு பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. எனினும் இனியும் நாம் திருந்தவில்லை என்றால் தொற்று தனது கோர முகத்தை காட்டத் தொடங்கிவிடும். பொறுப்புள்ள மனிதராவோ நாம் இந்த சமூகத்தில் வாழ வேண்டும். ஆகவே சுகாதார நடைமுறைகளை பேணி நடவுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

No comments: