News Just In

5/27/2021 10:37:00 AM

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டமும் கிடையாது...!!


நாட்டில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டமும் கிடையாது. போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை விட , ஏனைய நாடுகளைப் போன்று காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டமும் கிடையாது. நாட்டு மக்களுக்கு போக்குவரத்து தொடர்பில் காணப்படும் உரிமை அரசியலமைப்பின் 14 (1) உறுப்புரைக்கூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டத்தில் இல்லாத சட்டத்தின் கீழ் போக்குவரத்து கட்டுப்பாடுகள் எனக் கூறி மக்களின் போக்குவரத்துக்களை தடை செய்வதானது, முழு பொலிஸ் துறையையும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்கான செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம். போக்குவரத்து கட்டுப்பாடுகளின் போது கால தாமதம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டு பிரஜையொருவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்தால் , இதன் போது பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்.

போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை விட , ஏனைய நாடுகளைப் போன்று காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

அத்தோடு தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி முகக் கவசம் அணியாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அநாவசியமானதாகும். போக்குவரத்து கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வழிமுறைகள் கொவிட் ஒழிப்பு செயலணியின் தீர்வு என்று அறிவிக்கப்பட்டால் , குறித்த செயலணியின் செயற்பாடுகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தக் கூடிய உரிமை நாட்டு பிரஜைகளுக்கு உண்டு என்றார்.

No comments: