News Just In

4/22/2021 07:36:00 PM

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் நாளை திறக்கப்படுகிறது!!


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திறந்து வைக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி எட்டாம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனங்கள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில், கடும் அழுத்தத்தையடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வந்ததுடன் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா கடந்த ஜனவரி 11ஆம் திகதி தூபிக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

தற்போது நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் நாளை திறந்து வைக்கப்படுகிறது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா குறித்த நினைவுத் தூபியை திறந்துவைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நினைவுத் தூபி திறப்பு நிகழ்வில் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா பங்கேற்பது தொடர்பாக உறுதியாகத் தெரியவரவில்லை.

No comments: