News Just In

4/18/2021 07:49:00 PM

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!


இலங்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய, இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி. இன்று மதியம் 12 மணி முதல் நாடு முழுவதும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இதற்கமைய, அனைத்துப் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் அதிவேக வீதிப் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு இது தொடர்பில், பொலிஸ் தலைமையத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், அதிவேக வீதிகளின் நுழைவுப் பகுதி மற்றும் வெளியேறும் முனையங்களில், இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்

அத்துடன், ஏனைய பொதுப் போக்குவரத்து வீதிகளிலும், இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த ஐந்து நாட்களில், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில், 834 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, கடந்த 13 ஆம் திகதி முதல் இன்று காலை ஆறு மணிவரையான காலப்பகுதியில், 399 வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த விபத்துகளில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

அத்துடன், இதன்போது 669 பேர் காயமடைந்துள்ளதாகவும், இரண்டாயிரத்து 242 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், போக்குவரத்தில் ஈடுபடும் நபர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருதவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

No comments: