News Just In

4/10/2021 10:00:00 PM

மட்டக்களப்பு மாநகர சபை பொது சந்தை கட்டட தொகுதி மிக விரைவில் திறந்து விடப்பட்டு வர்த்தகர்களின் அவசிய தேவைகள் நிறைவேற்றப்படும்- மாநகர முதல்வர்!!


மட்டக்களப்பில் புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள பொதுச் சந்தை கட்டடத்தொகுதியானது மக்கள் பாவனைக்கு விரைவில் திறந்து வைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(09) மட்டக்களப்பு பொது சந்தைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை சந்தித்த்ததுடன் அவர்களது குறை நிறைகளையும் கேட்டறிந்தனர். இதன் போது வர்த்தக சங்கத்தினருடனும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மாநகர முதல்வர் மேற்படி தெரிவித்துள்ளார்.

குறித்த விஜயத்தின் போது, மட்டக்களப்பு மாநகர சபை சந்தை கட்டட தொகுதியானது அநேக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் பாவனைக்கு திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாளை(இன்று) முதல் சந்தை நடவடிக்கைகளை வர்த்தகர்கள் மேற்கொள்ள முடியும் என்றும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சரவணபவன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சந்தை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில் முதல்வர் சரவணபவன் கடமை ஏற்றதில் இருந்து மட்டக்களப்பு மாநகரில் சிறந்த முறையில் ஆட்சி நடைபெறுவதாகவும், இந்த செயற்திட்டத்திற்கு அனுமதி வழங்கிய முதல்வர் தியாகராஜா சரவணபவன்அவர்களுக்கும் மாநகர மக்கள் பிரதிநிதிகள் சபைக்கும் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பிற்கும் பெரும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் மாநகர முதல்வர் சரவணபவன், மாநகர பிரதி முதல்வர் சத்தியசீலன் மற்றும் மாநகர் உறுப்பினர்கள், ஊழியர்கள் என பலர் பிரசன்னமாகியிருந்தனர்.










No comments: