News Just In

4/26/2021 02:14:00 PM

கோத்தாவை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது- காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில்!!


நூருல் ஹுதா உமர்
கடந்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் சுமார் 30,000 வாக்குகளை பெற்று கொண்ட நபர் எமது மக்களை ஏமாற்றி விட்டார். அவர் தேசிய தலைவரையே ஏமாற்றியவர். தலைவரையே ஏமாற்றிய அவருக்கு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் ஒரு விடயமே அல்ல. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவார் என்கிற நம்பிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோதாபய ராஜபக்ஸவுக்கு கல்முனை தமிழ் மக்களில் குறிப்பிட்ட தொகையினர் வாக்களித்து உள்ளனர். ஆனால் இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கவலை தெரிவித்தார்.

இன நல்லிணக்கத்தை முன்னிறுத்தி காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்துக்கும், அம்பாறை சதாதிஸ்ஸபுர விளையாட்டு கழகத்துக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) அன்று காரைதீவு கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ கடின பந்து கிறிக்கெட் போட்டியின் பரிசளிப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்நாட்டில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு தமிழர்கள் எப்போதும் தயாராகவே உள்ளார்கள் என்பதற்கான நல்லெண்ண சமிக்ஞையை காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் வழங்கியுள்ளது. இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள் ஏற்று அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகள் செய்து தரப்பட வேண்டும். ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறாக இல்லை. எமது இந்த கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி தர வேண்டும் என்று காலம் காலமாக சிங்கள அமைச்சர்கள் மற்றும் அரசாங்க எம். பிகள் ஆகியோரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவர்களும் வந்தார்கள். வாக்குறுதிகள் தந்தார்கள். சென்றார்கள். எவையும் நடக்கவே இல்லை என்றார்

No comments: