News Just In

4/06/2021 02:56:00 PM

ஆளுமை விருத்திக்கு களம் அமைத்துக்கொடுக்கும் பாலர் பாடசாலை- கிரண்மயாவின் புத்தக வெளியீடு!!


நான்காம் வயதை பூர்த்தியாக்கிய கிரண்மயா துஷ்யந்தாவின் தன்னார்வத்தையும் அவளது ஆளுமையையும் விருத்திசெய்து மெருகூட்டும் களமாக மட்டக்களப்பிலுள்ள அவளது பாலர் பாடசாலை அமைந்துள்ளது.

Batticaloa Early Years School (BEYS), பாடசாலையின் நான்காவது வருட பூர்த்தி விழாவை கொண்டாடும் நிகழ்வில் மாணவர்களது ஆடல் பாடல் செயற்பாடுகளுடன் கிரண்மயாவால் ஆக்கப்பட்ட "My Rainbow Kitten" எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.

சிறுபராயத்திலேயே துடிப்பும் சிந்தனை ஆற்றலும் மிக்க சிறுமி கிரண்மயா புதுமையாக சிந்திப்பதோடு வினாக்களைத்தொடுத்து தனது தேடலின் கருப்பொருளை பெற்றுக்கொள்பவர். அவரின் முதல் வெளியீடாக இந்நூல் அமைந்துள்ளது.

விலங்குகளின் மேல் இந்த மழலையின் அன்பின் வெளிப்பாடாக இந்த நூல் அமைகின்றது. கல்லடிப்பாலத்தின் அருகே தான் கண்ட ஒரு பூனை வானவில்லின் நிறத்தில் அமைந்திருந்ததாக கூறியுள்ளார். தன் தாயுடன் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் இவர் தான் தெருவில் கண்ட அந்த விநோதமான பூனையை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார். அவளது தாய் அவளது செயற்பாடுகளை தட்டிக் கொடுப்பவளாக, ஆதரவு வழங்குபவளாக, அந்தப் பூனைக்கு பால் கொடுக்கிறார். அப்பூனை பாலைக்குடித்துவிட்டு அப்பாத்திரத்தினுள் ஏறி நித்திரை கொள்வதாக இக்குழந்தையின் கற்பனை நீண்டு செல்கின்றது.

குழந்தையின் கற்பனை என்று நாம் சாதாரணமாக தட்டிக் கழித்துவிடாமல் அவளது எண்ணங்களையும் அவற்றை கிறுக்கல்களாக வெளிப்படுத்தும் ஆற்றலையும் வளர்க்க உதவிய அவளின் எதிர்காலத்துக்கு மையப்புள்ளி இட்டுக்கொடுத்த இந்த பாலர் பாடசாலைக்கும் அங்கு கற்பித்தலை வழிநடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் குழந்தை கிரண்மயா நன்றிக் கடன்பட்டுவிட்டார்.

செட்டை தட்டிப் பறக்கும் பட்டாம் பூச்சிகளை குண்டூசிகளால் குத்தி மேசையில் வைப்பது போலல்லாமல் அவற்றை விண்ணில் பறக்கவிட்டு அவற்றை ரசிக்கும் ஆசிரியர்கள் என்றென்றும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

குழந்தை தானே இவளுக்கு இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் உண்டு எனத் தட்டிக்கழிக்காது அவளது எண்ணங்களையும் ஆற்றல்களையும் ஊக்குவிக்கும் அன்புப் பெற்றோரின் கரிசனையும் இவ்விடத்தில் நோக்கற்பாலது. குழந்தையின் கற்பனை இங்கு மெருகூட்டப் படவில்லை, யதார்த்தமாகவே அமைந்துள்ளமையை காணமுடிகின்றது. வானவில் சூரியனுடன் போட்டிபோடும் காட்சி வாசகர்களை வியப்படையச்செய்கிறது. அதேபோல அந்த பூனைக்குட்டியை கூடையில் வைத்து வீட்டிற்கு கொண்டு செல்லும் வரைபடம் குழந்தையின் உளவயது முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாயுள்ளது.

எது எப்படியாயினும் இந்தக் குழந்தையின் மரபுவழி முன்னூக்கிச் சென்று பார்க்கையில் மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை தேடித்தந்த பண்டிதர்.வீ.சீ .கந்தையா அவர்களும் பெரும்புலவர் பண்டிதர்.செ.பூபாலப்பிள்ளை அவர்களும் கிரண்மையாவின் தந்தைவழி, தாய்வழி பூட்டன்மார் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். எல்லாவற்றிக்கும் மேலாக மாஸ்டர்.சிவலிங்கம் மாமா, நம்மூர் போற்ற வாழ்ந்துகொண்டிருக்கும் கதைசொல்லிக் கவிஞன் கூட கிரண்மயாவின் பாட்டனார் முறையிலானவரே.

இந்த சிறு குழந்தையின் ஆற்றலைத்தட்டிக்கழிக்காது அதற்கு மெருகூட்டி மேடை ஏற்றிய பாடசாலை பாராட்டப் படவேண்டியது. இவ்வாறு ஒவ்வொரு குழந்தையின் கிறுக்கல்களும் அர்த்தமுள்ளது. அவற்றைத் தேடிக்கண்டு வழிப்படுத்த வேண்டிய கடமை பாடசாலைக்கும் வீட்டுக்கும் உண்டு.




No comments: