News Just In

3/15/2021 10:48:00 AM

மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் கொரோனாவால் உயிரிழந்த கத்தோலிக்க பெண்ணின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஓட்டமாவடி சூடுபத்தினசேனை நல்லடக்கப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தவிர்த்து முதன் முறையாக கத்தோலிக்கப் பெண் ஒரவரின் சடலமும் சனிக்கிழமை 13.02.2021 நல்லடக்கம் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நஸிர் அஹமட் தெரிவித்தார்.

இது நாட்டின் இன ஐக்கியத்திற்கும் மனிதாபிமானம் மரணித்து விடவில்லை என்பதற்கும் சிறந்தசான்றாக அமைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எந்த மதத்தவராக இருந்தாலும் விருப்பத்திற்கு மாறாக எரிக்கப்படும் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவிருந்து ஓயாது நடவடிக்கை மேற்கொண்டவன் என்ற ரீதியிலே சனிக்கிழமை கத்தோலிக்கப் பெண்ணின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட விடயத்தை நல்லிணக்கத்தை விரும்புவோருக்கான ஒரு வெற்றி என்று தான் உணர்வதாக அவர்தெரிவித்தார்.

ஜா-எலையைச்சேர்ந்த 60 வயதான அந்தப் பெண்மணி கொரோனா வைரஸ் தொற்றுக்கள்ளாகிய நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சை பயனின்றி மார்ச் 08ஆம் திகதி மரணமடைந்தார்.அவரின்உடல் சனிக்கிழமை 13.02.2021 ஓட்டமாவடியில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுவரும் சூடுபத்தினசேனை பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இலங்கையில்பல்வேறு பிரதேசங்களில் வைக்கப்பட்டிருந்த 45 கொரோனா பூதவுடல்கள் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி,கொவிட் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் முழுவதுமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரண்டு சடலங்கள் உள்ளதாகவும் அவை விரைவில்அடக்கம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் மார்ச் 05ஆம் திகதி 09 சடலங்கள் 06ஆம் திகதி 11 சடலங்கள் 07ஆம் திகதி 04 சடலங்கள் 08 ஆம் திகதி 07 சடலங்கள் 09 ஆம் திகதி 07சடலங்கள் 10ஆம் திகதி 01 சடலம் 13ஆம்திகதி 05 சடலங்கள் எனும் அடிப்படையில் மொத்தமாக 45 சடலங்கள் நல்லடக்கம்செய்யப்பட்டுள்ளன.

No comments: