News Just In

3/26/2021 08:15:00 PM

ஐ.நா.வில் பிரேரணை தோற்க வேண்டுமென சில தமிழ் கட்சிகள் கைக்கூலிகளாகச் செயற்பட்டன- சுமந்திரன்!!


ஐ.நா.மனித உரிமை பேரவையின் பிரேரணையினை தோற்கடிக்கவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாக செயற்படும் சில தமிழ் கட்சிகள் பிரேரணையினால் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லையென்ற பிரசாரத்தினை முன்னெடுத்துவருவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது.கடந்த 23ஆம் திகதி இறுதி தீர்மானங்கள் வாக்கெடுப்புக்குவிடப்பட்டன.இந்த கூட்டத்தொடரில் முதலாவது தீர்மானமாக இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் 2009ஆம் ஆண்டு ஒரு தீர்மானமும் அதனை தொடர்ந்து 2012,2013,2014ஆம் ஆண்டுகளில் வாக்குகெடுப்புடன் மூன்று தீர்மானங்களும் அதனை தொடர்ந்து 2015,2017,2019ஆம் ஆண்டுகளில் இலங்கையின் இணை அனுசரணையுடன் இணைந்து வாக்கெடுப்பு இல்லாமல் மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இறுதியாக நிறைவேற்றப்பட்ட 40 ஒன்று தீர்மானம் 2021ஆம்ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் இலங்கையில் நிலவுகின்ற விடயங்கள் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரலுவலகம் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.அந்த அறிக்கை டிசம்பர் மாதமே ஒரு வரைபாக இலங்கைக்கு காண்பிக்கப்பட்டதாக நாங்கள் தற்போது அறிந்தோம். அது ஜனவரி நடுப்பகுதியில் பகிரங்கமாக வெளியிடப்படடது.

அந்த அறிக்கை கடந்த அறிக்கைகளை விட மிகவும் காட்டமாக இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்ற பொறுப்புக்கூரல் நடவடிக்கை தொடர்பான விடயங்களிலோ நல்லிணக்கம் ஏற்படுத்துவதாக கூறி வழங்கிய வாக்குறுதிகளையோ நிறைவேற்றாமல் பின்னடித்ததை அந்த அறிக்கையில் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருந்தார். அதுமட்டுமன்றி உள்நாட்க்குள்ளேயே பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் சரியாக வராது என்பதையும் அவர் தீர்மானமாக கூறியிருக்கின்றார்.

அந்த அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்பட்ட மனித உரிமை மீறல்கள்,யுத்தக்குற்றங்கள்,மனிதாபிமான சட்டத்திற்க எதிரான குற்றங்கள் போன்ற சர்வதேச குற்றங்களை விசாரணைசெய்து தண்டனை வழங்குகின்ற நீதிமன்ற பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படவேண்டும், அதுவொரு முழுமையான பொறிமுறையாக இருக்கவேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் சொல்லியிருக்கின்றார்.சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அது கொண்டுசெல்லும் வகையில் இருக்கவேண்டும் எனவும் அவர் கூறியிருக்கின்றார்.

இந்த அறிக்கையினையடுத்து இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தினை பிரித்தானியா தலைமையிலான ஆறு இணை அனுசரனை நாடுகள் முன்வைத்தன.அது முன்வைக்கப்படுவதற்கு முன்பாக தமிழ் தேசிய கட்சிகள் என்ற அடிப்படையில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தினைக்கொண்டுள்ள கூன்று கட்சிகள் இணைந்து ஒரு கடிதம் ஒன்றினை உறுப்புநாடுகளுக்கு அனுப்பியிருந்தோம்.

அதில் பொறுப்புக்கூறல் என்ற பகுதியை ஐநா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேகொண்டுவரவேண்டும். இலங்கை உறுதியளித்த பல விடயங்களை நிறைவேற்றத்தவறியதன் காரணமாகவும் புதிய ஆட்சி பதவியேற்றதன் பின்னர் அந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்று அறிவித்திருந்த நிலையில் பொறுப்புக்கூறல் என்ற வியடம் ஐநா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியே செல்லவேண்டும்,அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக செயலாளர் நாயகத்திடமும் பொதுச்சபையிலும் கொண்டுவரப்படவேண்டும். ஏனென்றால் அது பாதுகாப்பு சபை மூலமாக மட்டும்தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படலாம்.

இதனுடன் இணைந்து சாட்சியங்களை சேகரிப்பது,பாதுகாப்பது போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படவேண்டும்.அண்மையில் சீரியாவிலும் மியன்மாரிலும் இவ்வாறான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது அதனை பின்பற்றி அப்படியான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.

ஐநா மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரரணையில் அந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.உள்நாட்டு பொறிமுறை,பொறுப்புக்கூறல் தொடர்பாக செய்யப்படமாட்டாது,இலங்கைக்கு அது தொடர்பான கரிசனையில்லையென அந்த தீர்மானம் சொல்லுகின்றது.

அதுமட்டுமன்றி முழுமையான பொறுப்புக்கூறல் சர்வதேச ரீதியில் கொண்டுவரப்படவேண்டும்,அதற்கு முன்பாக இந்த விடயங்கள் கொண்டுசெல்லப்படவேண்டும் என சொல்லியிருக்கின்றது. ஐநா மனித உரிமைகள் பேரவையினை பொறுத்தவரையில் அதன் அங்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு எதனையும் பாரப்படுத்தமுடியாது.அதற்கான அதிகாரம் அவர்களிடத்தில் இல்லை.அதனை பாதுகாப்பு சபை மட்டும்தான் செய்யமுடியும்.அதனால் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் என்று அவர்கள் சொல்லமுடியாது.

அதன்காரணமாகத்தான் அதன் பெயரைக்குறிப்பிடாமல் ஒரு முழுமைபெற்ற பொறிமுறைக்கூடா இதுகொண்டுசெல்லப்படவேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள்.சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பதை அவர்கள் நேரடியாக சொல்லவில்லை.நாங்கள்கேட்டுக்கொண்ட விடயம் அங்கு செய்யப்பட்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அது வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.சாட்சியங்களை சேகரிப்பது,பேணுவது,பரிசீலனை செய்வது என்ற மூன்றையும் மேற்கொள்வதற்கான பொறிமுறை ஏற்படுத்தப்படவுள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் அதிகார வட்டத்தினை கவனத்தில்கொண்டு இதில் இன்றுள்ள உறுப்பு நாடுகள் யார் என்று கவனத்தில் எடுப்போமானால் நாங்கள் தமிழ் மக்கள் சார்பிலே கேட்டுக்கொண்டவை கிடைத்த ஒரு வெற்றி.

ஆனால் துரதிர்ஸ்டவசமாக எப்போதையும்போல பலர் இதனை ஒரு தோல்வியாக சித்தரித்துக்கொண்டிருக்கின்றார்கள்.அரசாங்கத்துடன் இணைந்து இந்த பிரேரணையை தோற்கடிப்பதற்கு என்று சிலர் செயற்பட்டனர்.பிரேரணையில் எந்த பிரயோசனமும் இல்லை,இந்த தீர்மானம் தேவையற்றது என்றெல்லாம் சொல்லி அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்பட்ட சில தமிழ் கட்சிகள்,தற்போதும் அதில் எந்த பிரயோசனமும் இல்லையென்ற பிரச்சாரத்தினை தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுத்துவருகின்றனர்.

எந்ததந்த கருவியை எந்ததந்த வகையிலே உபயோகிக்கமுடியும் உச்சளவுக்கு ஒரு கருவியை எந்தளவுக்கு உபயோகிக்கமுடியும் என்று தெரிந்தவர்களுக்கு ஐ.நா.மனித உரிமை பேரவை தீர்மானம் வலுவான தீர்மானம் என்று தெரியும்.சாட்சியங்களை சேகரிக்கின்ற பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.ஆகையினால் இந்த பிரேரணையை கொண்டுவந்த பிரித்தானியா உட்பட்ட நாடுகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.
11நாடுகள்தான் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் அதற்கு இரட்டிப்பான நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக காட்டுகின்றது.

நடுநிலையாக இருந்த நாடுகளின் மனநிலையிலும் மாற்றமுள்ளது.இந்தியா நடுநிலை வகிப்பதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில் தெட்டத்தெளிவாக இலங்கையின் ஆட்புல ஒற்றுமைக்கு சமாந்தரமாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை சொல்லியுள்ளார்கள்.தமிழர்களின் அபிலாசைகளை அடைவதற்கு அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம் என்று திட்டவட்டமாக அறிக்கையூடாக சொல்லப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அரசியல் அதிகாரங்கள் பகிரப்படுவதும் 13வது திருத்ததில் உள்ள விடயங்கள் அமுல்படுத்தப்படுவதும் எந்த தங்குதடையுமன்றி மாகாணசபைகள் இயங்குவதும் விரைவாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்படவேண்டும் என்றும் தெளிவாக நடுநலை வகித்த இந்தியா சொல்லியுள்ளது.

இதுகால அவகாசம் வழங்கும் தீர்மானம் அல்ல.என்றைக்கும் எந்த தீர்மானங்களும் இலங்கைக்கு கால அவகசாம் வழங்குவதில்லை.ஒரு வருட வாய்மூலமாக அறிக்கை என்ற விடயம் இன்று ஆறு மாதங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.இரண்டு வருட இறுதியில் எழுத்துமூலமான அறிக்கையென்று சொல்லப்பட்டுள்ளது.அது மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு கொடுக்கப்பட்ட ஒரு காலக்கெடு.அது நாட்டுக்கு கொடுக்கின்ற காலக்கெடு அல்ல.இது தொடர்பில் சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றன.

உண்மையில் மிக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.எமது மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதி,பரிகாரம் காலம் கடந்தாலும் மெதுவாக நகர்ந்தாலும் இறுதியில் அதனை நாங்கள் அடைவோம் என்ற நம்பிக்கையினை வைத்திருக்க உதவியுள்ளது.

அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவுக்கு எண்கணிதம் தெரியும் என்று நம்பியிருந்தேன்.இப்போது அது தொடர்பில் சந்தேகம் வந்துள்ளது.இலங்கை பாராளுமன்றத்தில் சாதாரண பிரேரiணையை நிறைவேற்றுவதாக இருந்தால் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கைதான் கருத்தில்கொள்ளப்படும்.வாக்களிக்காதவர்கள் தொடர்பில் கருத்தில்கொள்வதில்லை.

நாட்டின் நிலைமை தற்போது மோசமான நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.ஏதாவது கட்டத்தை தாண்டி படுமோசமான நிலைக்கு நாடுசென்றால் ஐநா பாதுகாப்பு சபை மூலமாக சமாதான படையினை நிறுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments: