News Just In

12/02/2020 07:07:00 PM

இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துமாறு கோரல்; நாடாளுமன்றத்தில் நஸீர் அஹமட்...!!


-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பில் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சுரமான நஸீர் அஹமட் நாடாளுமன்றத்தில் அரசைக் கோரினார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை 02.12.2020 உரையாற்றியபோது அவர் இந்த விடயத்தை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது என்னால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், 2017 செப்டம்பர் 30ஆம் திகதி எனது பதவிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் முற்றுப்பெறாமல் இடைநடுவில் நின்று போயின.

அந்த வகையில் புன்னைக்குடா வீதியில் தொடங்கப்பட்ட ஏறாவூர் பொதுச்சந்தையும் ஒன்றாகும்.

இந்தப் பொதுச்சந்தை அமைந்திருந்த கட்டிடம் மிகவும் பழைமை வாய்ந்ததாக இருந்ததாலும். போதிய சுகாதார வசதிகள் இல்லாமையினாலும் புதிய கட்டிடத்தை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர் இதனையடுத்து புதிய சந்தையை அமைப்பதற்கான முயற்சியை அதே இடத்தில் தொடங்கினேன்

நகர திட்டமிடல் அமைச்சின் மூலம் மாகாண சபைகளுக்கூடாக இந்த திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தோம்.

2016ஆம் ஆண்டு ஆரம்பித்து 2017இல் இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்கான உத்தேசம் இருந்தது.

துரதிர்ஸ்டவசமாக மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவுறுத்தப்பட்டதால், கட்டிட வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்தன.

இந்தக் கட்டிடம் பூர்த்தி செய்யாமல் இன்று காட்சியளிக்கிறது. இதே இடத்தில் முன்னர் இருந்த சந்தையில் வியாபாரம் செய்த 150 க்கு மேற்பட்ட வியாபாரிகள் வெளியேற்றப்பட்டு தற்காலிக கட்டிடம் ஒன்றில் வியாபாரம் செய்ய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன.

எனினும் ஏறாவூர் சந்தைக் கட்டிடம் கட்டி முடிக்கப்படாததால் வியாபாரிகள் தங்களது வருமானங்களை இழந்துள்ளார்கள்.

அதேபோன்று ஏறாவூரில் நவீன நூலகத்துடன் கூடிய கலாச்சார மண்டபம் அமைக்கும் பணிகளுக்கு நகர திட்டமிடல் அமைச்சு அனுமதி வழங்கி, நிதி ஒப்பந்தங்களின் பின்னர் வேலைகள் தொடங்கப்பட்டபோதும் மாகாண சபைக்கான பதவிக்காலம் முடிவு பெற்றதால் அந்தக் கட்டிடப் பணிகளும் பூரணப்படுத்தி முடிக்கப்படவில்லை.

எனவே இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவில் பூரணப்படுத்தி தருமாறு இந்த உயர் சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.”

No comments: