அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மாவட்டத்திலுள்ள பிரதேசம்தோறும் இவ்வகுப்புகளை அங்குரார்ப்பணம் செய்துவருகிறார். இவருடன் உத்தியோகத்தர் கே.பிரதாப் ஈடுபட்டுவருகிறார். இதேபோன்று பிரதேசங்கள்தோறும் பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகிறார்கள்.
அறநெறி மாணவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு இவ்வகையான யோகா, பண்ணிசை, நடனம், மாலைகட்டுதல் போன்ற வகுப்புகளில் ஆர்வமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்துகலாசாரத் திணைக்களத்தின் திணைக்களப் பணிப்பாளர் அருள்.உமாமகேஸ்வரன் இத் திணைக்களத்தை பொறுப்பேற்ற பின்னர் இந்து சமய அறநெறிக் கல்வியில் பாரிய மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.
அறநெறி மாணவர்களுக்கு பாடநூல் தொகுதி வழங்கப்பட்டுள்ளதுடன் அறநெறி ஆசிரியர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது. அறநெறி மாணவரிடையே ஆன்மீக நெறியை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு பலவித நிகழ்ச்சிகளை நடாத்திவருகிறது.
அதற்கான பரிசளிப்பு விழாவை பாரியளவில் நடாத்திவருகிறது. சிறந்த அறநெறி வகுப்புகளைத் தெரிவுசெய்யும் போட்டி, ஆக்கத்திறன் விருது வழங்கும் போட்டி அதற்கான பரிசளிப்பு விழாக்கள் என்று பலதரப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை பணிப்பாளர் அருள்.உமாமகேஸ்வரன் அவர்கள் செய்துவருகிறார்.
இவற்றுடன் வடக்கில் ஆறுமுகநாவலர் பெருவிழாவையும், கிழக்கில் சுவாமி விபுலாநந்தர் பெருவிழாவையும் நடாத்திவருகிறார்.
அறநெறி மாணவர்களுக்கு தெய்வப்படங்கள் மற்றும் திருவுருங்கள் எவ்வாறு வரைவது என்பது தொடர்பில் இந்தியாவிலிருந்து பிரபல ஆஸ்தான ஓவியர் க.பத்மவாசன் என்பவரை அழைத்து பயிற்சி வழங்கப்பட்டது. அதன்தொடர் எதிர்வரும் சிவராத்திரியின்று தொடரவிருக்கிறது.
இவ்வகுப்புகளை எதிர்வரும் 21ஆம் திகதி பார்வையிடவிருக்கும் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் ஓவியம் வரைதல் பயிற்சியை வழங்கிவிருக்கிறார்.
வரலாற்றில் முதன்முறையாக இந்துகலாசார அமைச்சு தமிழ் கலை இலக்கியவாதிகளை கௌரவித்த பெருவிழா அண்மையில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலைக்காக அரிய சேவையாற்றிய பல மூத்த, நடுத்தர, இளம் கலைஞர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
மாவட்டத்திற்கான இந்துகலாசார கற்கைகள் நிலையம் சுவாமி விபுலாநந்தர் பெயரில் காரைதீவு சுவாமி விபுலாநந்த மணிமண்டப வளாகத்தில் அமையப் பெற்றிருப்பதும் அங்கு பலவகையான இந்து சமய பயிற்சி நெறிகள், கலசார நிகழ்வுகள் நடைபெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.வெள்ளிக்கிழமை (19) அங்கு ஓவியம் வரைதற்பயிற்சி நடைபெறவிருக்கிறது.
இந்துசமய அறநெறி மாணவர்கள் மத்தியில் தற்போதுதான் புத்துணர்ச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுவருகிறது. ஆசிரியர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்துவருகிறது. இது மேலும் தொடரவேண்டும்!




No comments: