News Just In

2/18/2020 06:37:00 PM

மண்டூர் பாலமுனை ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் இடம்பெறவுள்ள மகா சிவராத்திரி வழிபாடுகளும் மகா யாகமும்!!

சிவனுக்கென்று ஒரு ராத்திரி அதுவே மகா சிவராத்திரி எனப்படுகிறது. தவறாமல் நான்கு சாமப் பூஜைகளையும் அனுஸ்டிப்பதால் பெரும் பயன்கள் மனிதர்களுக்கு கிடைக்கிறது.

சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு ஒரு ராத்திரி என்கிறார்கள்; மனச் சோர்வினையும், உடல் சோர்வினையும் நீக்கி உயர் பேரின்பமாம் இறையின்பத்தினை நல்கவல்ல இந்த வழிபாட்டினை ரிஷிபரம்பரையில் அவதரித்த ஞான குருவின் வழிகாட்டலில் அனுஸ்டிப்பது மனிதர்கள் பெற்ற பெரும் பாக்கியம் எனலாம்.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 21ம் திகதி வெள்ளிக் கிழமை பிற்பகல் 5:30 மணிக்கு மண்டூர் பாலமுனையில் மூலகுரு அகஸ்திய மகரிஷி, கண்ணையா யோகி மகரிஷி, காயத்திரி சித்தர் பகவான் முருகேசு சுவாமிகளுக்கென தனித்தனியே ஆலயங்கள் அமைந்துள்ள ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் அகஸ்திய மகரிஷிகளின் வழித் தோன்றலில் அவதரித்த குரு முதல்வர் ஆன்மீகக் குரு மகா யோகி எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் தலைமையில்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ மிக மிக சக்திவாய்ந்த சிவ காயத்திரி மந்திரங்கள், ருத்ர காயத்திரி மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டு முறையே காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் தெய்வீக திருப்பாதங்களுக்கு பாத பூஜை, இந்தியாவிலிருந்து மகரிஷிகளால் ஆசீர்வதிக்கப்பட்டு தருவிக்கப்பட்ட சக்திவாய்ந்த உயிர் ஜீவ மூலிகைகள் இடப்பட்டு மகா யாகம்,

சுவாமிகளினால் ஊழித்தாண்டவமாடும் சிவபெருமானை நினைத்து பஜனைகள், ஈற்றில் பக்தர்களின் கரங்களினால் பகவான் முருகேசு சுவாமிகளின் திருப்பாதங்களுக்கு வில்வம் பத்திரம் சாத்தும் விசேட பூஜையும், அருளுபதேசம், அன்தானம் என்பன இடம்பெறவுள்ளது.

ஆன்மீக மெய்யன்பர்கள் இந்த புனித தின மகா யாகம் பூஜை வழிபாடுகளில் பங்குபற்றி உலகம் எதிர் நோக்கியுள்ள தொற்று நோய் தாக்கங்கள் தீர்க்கமுடியாத நோய்கள் என நோய்ப்பிணி நீங்கிடவும், பசிப்பிணி தீர்ந்திடவும் இப்பேற்பட்ட உண்மை வழிகாட்டியின் வழிகாட்டலில் சிவராத்திரி விரதத்தினை அனுஸ்டிப்பது சாலச் சிறந்த நன்மைகளை வாழ்வில் உண்டுபண்ணுமென்பது திண்ணம்.

ஞான நிலையடைந்த குருவின் கண்காணிப்பில் அவருடனே கலந்தமர்ந்து சிவனை நினைத்து பிரார்த்திப்பது அந்த சிவனுடனேயே அமர்ந்து பிராத்திப்பதற்கு சமனான ஒன்று "சித்தம் தெளிந்தாருக்கு சீவன் சிவலிங்கம்" என்று எம் முன்னோர்கள் கூறிச் சென்றதனையும் நினைவு கூருகிறோம்.

எனவே தவறாது கலந்து கொண்டு பெறற்கரிய பேற்றினை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்ளுகின்றனர், அங்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை காணிக்கை செலுத்த வேண்டியதில்லை பக்தியோடு வருகை தந்து இறைவனை நினைப்பது ஒன்றே பக்தர்களின் பணி.

தகவல்
ஸ்ரீ பேரின்ப ஞானபீடம்
இல.7 பெரிய உப்போடை வீதி
மட்டக்களப்பு
T.P. 0652226801

No comments: