News Just In

2/18/2020 05:48:00 PM

அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பை பெற்றுத்தர முடியாது.? 21 - 24 வயதுடையவர்கள் 21.9 வீதமாக அதிரிப்பு!


தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதன் மூலமே நாட்டில் நிலவும் பட்டதாரிகளுக்கான தொழிலின்மை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்த தேசிய புத்திஜீவிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் நிஹால் அபேசிங்க, நாட்டில் வேலையில்ல பட்டாதாரிகளில் 21 - 24 வயதுடையவர்கள் 21.9 வீதமானோர் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நிலையான தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதன் மூலமே நாட்டில் நிலவும் தொழிலின்மை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். நான்கு வருடங்களுக்கு மாறும் அரசாங்கத்தின் மூலம் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்க முடியாது. அதிரடியான நடவடிக்கையினால் இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாது.

ஜனாதிபதி தேர்தலின் போது ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தற்போது வரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பை பெற்ற தருவதாக குறிப்பிட்டும் இதுவரையில் எவ்வித நடடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. மேலும் உயர்தரம் தோற்றும் அனைவருக்கும் பல்கலைகழகங்களுக்கு உள்வாங்குவதற்கான செயற்திட்டத்தை மேற்கொள்ளவதாகவும் தெரிவித்தனர். எனினும் அவை எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நாட்டின் வேலையில்லாதவர்களில் 21-24 வயதுடையவர்கள் 21.9 வீதமாகும். அதில் பெண்கள் வீதத்தினை பார்க்கும் போது 28.7 வீதமாக காணப்டுகின்றன. மேலும் 25-29 வயதுகளில் வேலை இல்லாதவர்களின் தொகை 19.1 ஆக காணப்படுகிறது. நமது நாட்டின் 20 வீதமானோர் இளைஞர் யுவதிகள் பட்டதாரிகளாக இருப்பினும் தொழில் இல்லாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு வேலை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் முனைப்பை காட்டுவதில்லை. பதின்மூன்று வருடங்கள் பாடசாலை கல்வி பயின்று மேலும் பல்கலைகழகங்களில் மூன்று வருடங்கள் பயின்று பட்டம் பெற்று வேலை இன்றியே காணப்படுகின்றனர்.

74 வீத பாடசாலைகளில் உயர் தரத்தில் விஞ்ஞான பிரிவுகள் இல்லை. 36 வீத பாடசாலைகளில் மாத்திரமே விஞ்ஞான கல்வி கற்பிக்கப்படுகின்றன. ஏனைய அனைத்து பாடசாலைகளிலும் கலை மற்றும் வணிக கல்வியே கற்பிக்கப்படுகின்றன. ஏனெனில்உயர் தரத்திற்கு விஞ்ஞான தறையில் கல்வி கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை.

இவ்வாறானதொரு நிலையில் மாணவர்களால் எதும் செய்ய முடியாது. இருக்கிற கல்வியை மாத்திரமே கற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டு பல்கலை கழகத்திற்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களில் 39 வீதமானவர்கள் கலை மற்றும் வணிக பிரிவினராகவே உள்ளனர்.

2016 ஆம் ஆண்டில் மாத்திரம் 1 இலட்சத்து 55 ஆயிரத்து 550 மாணவர்கள் உயர்தரத்திற்கு தோற்றுகின்றனர். எனினும் பல்கலை கழகத்திற்கு உள்வாங்கப்பட்டவர்கள் 29ஆயிரத்து 83 பேர் மாத்திரமே. பரீட்சைக்கு தோற்றிய மொத்த மாணவர்களில் 17.1 வீத்தினர் மாத்திரமே பல்கலைகழகங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

சித்தியடைந்தும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களின் எதிர் காலத்திற்கு யார் பொறுப்பு கூறுவது. நாட்டில் அரசாங்கங்கள் மேலும் நூறு ஆண்டுகளுக்கு மாறி மாறி வந்தாலும் இந்த நிலைமை மாறப்போவதில்லை.

வேலையற்ற பட்டாதாரிகளக்கு மாதம் 20 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கி அவர்களுக்கு ஏதோவொரு வேலையை வழங்குவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முடியாது. சிரியா மற்றும் லிபியா போன்றதொரு நாடாக இலங்கை மாறுவதற்கு முன்னர் இந்த பிரசினைக்கு தீர்வு காண வேண்டியது மக்களின் கைகளிலே உள்ளது என அவர் தெரிவித்தார்.

No comments: