News Just In

1/22/2020 09:25:00 AM

நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற 'ஈழத்து மரபுரிமை' உரையாடல் வெளி

மட்டக்களப்பில் அரசடி பொது நுாலக முதலாம் மாடியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தில் “ஈழத்து மரபுரிமை” என்ற தலைப்பிலான உரையாடல் வெளி கடந்த சனிக்கிழமை (18.01.2020) நூலக நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் பிரசாத் சொக்கலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

ஈழத்து மரபுரிமை சார்ந்த உரையாடலுக்கான களம் ஒன்றை அமைப்பதன் மூலம் சமூகத்தில் மரபுரிமை சார்ந்த விளிப்புணர்வு மற்றும் அறிவூட்டலை பரவலாக்கும் நோக்கத்தோடு நூலக நிறுவனம் மாதம் தோறும்  இதனை நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

“மட்டக்களப்பு துாரிகைகளின் போக்கு” என்ற தலைப்பில் விபுலாந்தா இசை நடனக் கல்லுாரியின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி. சிவரெத்தினம் அவர்கள் தமிழர்களின் கட்புல பண்பாடு குறிப்பாக மட்டக்களப்பு பண்பாடு பற்றிய புரிதல் மற்றும் அதனுாடான

ஓவியங்கள் மற்றும் ஓவியர்கள் வெளிப்படுத்துகை அதனது போக்கு என்பன பற்றிய அறிமுகம் மற்றும் குறிப்பிட்ட சில ஓவியர்கள் அவர்களின் ஓவிய படைப்புக்கள் அதனுள் வைக்கப்படும் கருத்தியல் என உரையாடல் வெளிக்கான சிறப்பான அறிமுக உரை ஆற்றியதைத் தொடர்ந்து, 

நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள், ஓவியர்கள், ஆர்வலர்கள் அனைவரும் பயன்மிக்கதொரு கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தனர்.

இறுதியில் நூலக நிறுவன உத்தியோகத்தர் ச.தனஞ்சயன் அவர்களின் நன்றியுரையோடு உரையாடல் வெளி நிறைவுக்கு வந்தது.

No comments: