News Just In

10/15/2019 08:37:00 PM

மட்டக்களப்பு சர்வமத செயற்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இணக்கப்பாட்டை கட்டியெழுப்புதலுக்கான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஏற்பாட்டில் தேசிய சமாதானப் பேரவையினால் நடாத்தப்பட்ட சமய மற்றும் இன முரண்பாடுகளை தீர்த்து இணக்கப்பாட்டின் மூலம் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புதல், இன நல்லிணக்கத்திற்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல்முறைகள் தொடர்பான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (15.10.2019) கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் இணைப்பாளர் ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரெட்ன கலந்துகொண்டு இச் செயற்பாடுகளை ஆராய்ந்ததுடன் கருத்துரைகளையும் வழங்கினார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற முரண்பாட்டின் பின் முஸ்லிம் மக்கள் முகம் கொடுக்கும் நடைமுறைப் பிரச்சனைகள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கபபட்டது. இன அல்லது மத முரண்பாடுகளால் நாட்டில் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றியும் ஆராயப்பட்டது.

பொருளாதார வளர்ச்சிக்கும் அமைதிக்கும் இன விரிசல் பெரும் சவாலாக இருப்பதால் அது குறித்து உடன் செயற்பாட்டில் இறங்குமாறு செயற்பாட்டாளர்களுக்கு தாம் அறைகூவல் விடுப்பதாக இந் நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரெட்ன தெரிவித்தார்.

இதன் முதற் கட்டமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன விரிசல் ஏற்படக்கூடிய எல்லைப் பிரதேசங்களுக்கு அரச, அரச சார்பற்ற சிவில் அமைப்புக்களின் உதவியுடன் சர்வமத உறுப்பினர்கள் மற்றும் தேசிய சமாதானப் பேரவையினர் நேரடியாக சென்று இன நல்லுறவை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதென இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் நிலையங்களின் பொலிஸார், அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட சர்வமத செயற்குழுவினர் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments: