News Just In

9/21/2019 02:54:00 AM

மாநகர முதல்வருக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி. சரவணபவன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆகியோர்களுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று 20.09.2019 வெள்ளிக்கிழமை காலை மட்டு மாநகர சபை முதல்வர் காரியாலயத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் தெற்கு மற்றும் மேற்கு ஆசியா பிரிவின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வணிகத் திணைக்கள உதவிச் செயலாளர் லச்லன் ஸ்ரஹம், இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அபிவிருத்தி கூட்டுறவுச் செயலாளர் ரொம் டேவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் பிரதான கருப்பொருளாக உள்ளூராட்சி பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன.
மட்டக்களப்பினை ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றுதல் தொடர்பாகவும் அதற்கு தன்னால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பற்றியும் முதல்வரால் விளக்கமளிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் அமைச்சரவை நிதி ஒதுக்கீடுகளில் இருந்து மட்டக்களப்பு மாநகரம் புறக்கணிக்கப்பட்டுள்ளமையும், கிழக்கில் ஒரு இனம் சார்ந்த அபிவிருத்தி மாத்திரம் நடைபெற்றுள்ளமையும் அதற்கு சில அமைச்சர்கள் அனுசரணை வழங்கியிருக்கின்றமை பற்றியும் முதல்வர் அவர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் வருகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தங்களது நிலைப்பாடு என்ன? என்று தூதுக்குழுவினரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் அதனை தங்களது கட்சியினுடைய தலைமை முடிவெடுக்கும் என தெரிவித்துக்கொண்டார்.





1 comment: